பதவிக்கு ஆபத்து வரக்கூடாதுனு தகடு வச்சு பூஜை நடத்தும் துணைவேந்தரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுச்சேரியில் புதுரூட்டில் கல்லா கட்டும் டிராபிக் ‘காக்கி’கள் மீது கவர்னர், சிபிஐ வரை புகார் பறந்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் வெளிமாநிலத்தவர் அதிகளவில் வர்றாங்க.. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் அவர்கள் வரும்போது, எல்லைக்குள் நுழைந்ததும் குறிவைத்து அவர்களை மடக்கி டிராபிக் காக்கிகள் கல்லா கட்டி வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்துக்கிட்டு இருக்கு.. முறைகேடான வசூலை தங்களது நெருங்கிய உறவுகளின் ஜிபே, கூகுள்பேவுக்கு அனுப்பிய சிலர் மீது வழக்குகளும் சமீபத்தில் பாய்ந்துள்ளது. இதனால், உஷாரான டிராபிக் காக்கிகள் தற்போது புதுரூட்டில் கல்லா கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்களாம்.. அதாவது சிறிய விபத்து நடந்தால் போதும், அதற்கு காரணமானவரிடமும் விசாரணை பெயரில் மூக்கை நுழைப்பதோடு, அடிபட்டு மருத்துவமனையில் படுக்கையில் இருப்பவரின் வார்டுக்கே வழக்கறிஞரையும் கையோடு அனுப்பி வைக்கிறார்களாம்.. அவர் வழக்கை என்னிடம் கொடுங்கள்… எல்லாத்தையும் சாதகமாக முடிக்கிறோம்னு வார்டுக்கே வந்து கூறுவதால் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்களாம் உறவுகள் தரப்பு.. எந்த புகாரும் நாங்கள் கொடுக்கவில்லை, அந்த மனநிலையும் இல்லைன்னு சொன்னாலும் நகர்வதில்லையாம்.. தினமும் ஒன்று, இரண்டு நபரை வளைத்து இதுபோன்று வசூலாகும் ப- விட்டமின் இன்ஸ்., எஸ்ஐ மட்டுமின்றி சாதாரண காக்கிகள் வரை பிரிக்கப்படுகிறதாம்.. குறிப்பாக வளர்ந்து வரும் கிராமப்பகுதி டிராபிக் காக்கிகளுக்கு வில்லங்கமான இந்த புதுவசூல் துணிச்சல்மிக்க கைவந்த கலையாகி விட்டதாம்.. இதன் பின்னணியை விசாரித்த சில சமூக நலவிரும்பிகள் கவர்னர், சிபிஐ வரைக்கும் புகார்கள் பறந்து உள்ளதாம்.. இதனால் வசூல் காக்கிகள் கதி கலக்கத்தில் உள்ளார்களாம்..’’ என்கிறார் விக்கியானந்தா.
‘‘வீடுவீடா போய் ‘விட்டமின் ப’ கொடுத்தும் இலைக்கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் வராததால் மூத்த நிர்வாகிகள் கடும்பாயிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் இலைக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க.. ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் கூட்டத்தை காட்ட வேண்டும்னு தலைமையிடத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகளுக்கு முதல்நாளே உத்தரவு வந்ததாம்… இதனால பெரிய அளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என்றால் ‘விட்டமின் ப’ கொடுத்தால்தான் கூட்டத்தை காட்ட முடியும். வேற வழியில்லை என நிர்வாகிகளுக்குள் புலம்பினாங்களாம்… இதனால் முதல்நாளே வீடுவீடாக சென்ற நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ளும்படி கட்சியினருக்கு ‘விட்டமின் ப’ கொடுத்திருக்காங்க… ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எதிர்பார்த்த அளவில் கூட்டம் வராததால் அதிர்ச்சிக்குள்ளான மூத்த நிர்வாகிகள், ஆர்ப்பாட்டம் முடிந்து செல்லும்போது ‘விட்டமின் ப’ கொடுத்தும் உங்களால் கூட்டத்தை காட்ட முடியவில்லையேன்னு நிர்வாகிகளை ரொம்பவே கடிந்து கொண்டாங்களாம்… ‘விட்டமின் ப’ செலவு செய்தததோடு, மூத்த நிர்வாகிகளிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம்னு நிர்வாகிகளுக்குள்ளே புலம்பிக்கிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மனநல ஆலோசகரா பணியில் சேர்ந்து சிறை கைதியின் உறவினர்கள், கூட்டாளிகளிடம் விட்டமின் ப கறந்தவரை காவலர்களே காட்டிக்
கொடுத்துவிட்டாங்களே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மத்திய சிறையில் உள்ள சிறை காவலர்கள் ‘ப’ விட்டமின் வாங்கிக் கொண்டு சிறைக்குள்ள தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்தாங்களாம்.. சிறை நிர்வாகம் அடிக்கடி நடத்திய ரெய்டில் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்ததோடு உதவிய காவலர்களை சஸ்பெண்ட் செய்தும் வந்தாங்க.. இதனால சில மாதங்களா கைதிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய, காவலர்கள் யாரும் முன்வரவில்லையாம்.. இந்நிலையில தான் கைதிகளுக்கு மனநல ஆலோசகராக மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிவல மாவட்ட பெயர் கொண்டவர் சிறைக்குள் சில மாதங்களுக்கு முன்பு பணியில சேர்ந்தாரு.. சேர்ந்த கொஞ்ச நாள்ல, சிறையில உள்ள கைதிகளிடம் நட்பாக பேசி பழகி, சிறைக்குள் பெறும் தகவல்களை வெளியே சென்று, கைதிகளின் உறவினர்கள், கூட்டாளிகளிடம் தெரிவித்து, ப விட்டமின் பெற்றுக் கொண்டாராம்.. இந்த நூதன முயற்சியை அறிந்த சிறை கைதிகளுக்கு உதவிய காவலர்கள், நமக்கு சேர வேண்டிய விட்டமனுக்கு வேட்டு வச்சிடுவார் போல இருக்குதேன்னு இதற்கு செக் வைக்க முடிவு செய்தாங்களாம்.. அதன்படி சிறை காவலர்களே மனநல ஆலோசகர், ரவுடிகளுக்கு உதவுவதாக சிறை நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனராம்.. இதையடுத்தே சிறை நிர்வாகம் உஷாராகி காவல் நிலையத்தில புகார் அளிச்சிருக்காங்க.. அதன்பேரில், போலீசார் மனநல ஆலோசகரை கைது செய்திருக்காங்க.. விசாரணையில், சிறையில ரவுடிக்கு தகவல் தெரிவித்து மீடியேட்டரா இருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டாராம்.. அதோட சிறையில காவலர்கள் சொன்னதன் பேரில தான் கைதிகளுக்கு உதவினேன்னு விசாரணையில் தெரிவிச்சிட்டாராம்.. இதையறிந்த சிறை காவலருங்களும் கதிகலக்கத்தில இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஊழல், முறைகேடு எத்தனை வந்தாலும் பதவி நீட்டிப்புக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு கோயில் கோயிலா பூஜை செய்திட்டு வர்றது யுனிவர்சிட்டி விசி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சர்ச்சைகளுக்கு பெயர்போன மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி விசி, தன்னோட பதவிக்காலம் முடிஞ்சாலும் கிண்டி மாளிகையில காய் நகர்த்தி பதவி நீட்டிப்பு வாங்கிட்டாரு.. தன் மீது எத்தன ஊழல், முறைகேடு புகார் வந்தாலும், தன்னோட பதவிக்கு ஒரு ஆபத்தும் வராம பார்த்துக்கணும்னு என்கிற குறிக்கோளோட இருக்காரு.. அதுமட்டுமில்லாம தனக்கு எதிரா இருக்குற அனைவரையும் வீழ்த்தியே தீருவேன்னு சபதம் போட்டுருக்காராம்.. இதற்காக ஏற்கனவே தன்னோட வீட்டுல சிறப்பு யாகம் நடத்தின அவரு, நாள்தோறும் 2 தகடுகளை வச்சு பூஜை செஞ்சிட்டு வர்றாராம்.. சமீபத்துல திருப்பதிக்கு போன விசி, பிறகு முட்டை மாவட்டத்துல இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு போயிருக்காரு.. அங்கு ஆட்டை பலியிட்டும், 48 எலுமிச்சை பழத்தை வச்சும் சிறப்பு பூஜை செஞ்சு மனமுருக வேண்டினாராம்.. அடுத்ததா திருச்செந்தூர் போன விசி, எதிரிகளை வீழ்த்த சத்ரு சம்ஹார பூஜையையும் நடத்தினாராம்.. இது எல்லாம் போதாதுன்னு நெனச்ச அவரு, ஷீரடி வரை போகவும் திட்டம் போட்டுருக்காராம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு