மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயிலில் இன்று ஆடித்திருவிழா


மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான செல்லியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. இக்கோயில் அமைவதற்கு முன்பாக அந்த கிராம் ஈச்ச மரம் புதர்களுடன் விலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதியாக இருந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகில் நாராயண ஐயர் என்பவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும், அவரது மனைவி கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவராகவும் இருந்துள்ளனர். இவர்களது தோட்டத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மாடு ஒன்று விவசாய பயிரை மேய்ந்து விட்டு சென்று விடுகிறது. இதனால் நாராயண ஐயர் அந்த மாட்டை கொன்று விட வேண்டும் என்று வேலையாட்களுக்கு உத்தரவிடுகிறார்.

அதன்படியே வேலையாட்கள் அந்த மாட்டை கொன்று விடுகின்றனர். அம்மனுக்கு நேர்ந்து விட்ட மாடு மாரிபுத்தூர் கிராமத்தில் கொன்று வீசி உள்ளதாக பூசாரி ஒருவர் நாராயண ஐயரிடம் முறையிட்டார். மாட்டை வனவிலங்குகள் அடித்து கொன்றிருக்கும் என நாராயண ஐயர் கூறிவிட்டு சென்று விடுகிறார். அன்று இரவே நாராயண ஐயரின் கனவில் முனிவர் ஒருவர் தோன்றி உன் வம்சம் அழியப் போகிறது. உன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் பறிபோய்விடும் எனக் கூறி, இதற்குப் பிராயச்சித்தமாக காராம் பசு மாடு வாங்கி வளர்த்து வா, என்று கூறிவிட்டு மறைந்தார். இதனை அடுத்து நாராயண ஐயர் காராம் பசு வாங்கி வளர்த்து வந்தார். அந்த பசு மாட்டை திருடன் கொன்றுவிடுகிறான். பசு மாட்டை கொன்றது அந்தத் திருடன் தான் என்று அதிகாரிகளுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் தெரியவர இந்த செய்தி திருடனை சென்றடைகிறது.

அந்த திருடனும் பஞ்சாயத்திற்கு பயந்து போய் அம்மனை நினைத்து தாயே வயிற்றுப் பிழைப்பிற்காக பசு மாட்டை கொன்று விட்டேன், என மனம் உருகி வேண்டினான். திருடனின் கனவில் வந்த அம்மன் நீ கொன்ற பசு மாட்டுத் தலையை மாரிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஈச்சம் மரம் புதரில் என் சிலை அருகில் மறைத்து வைத்து வீடு என்று கூறி அம்மன் மறைந்தார். இதனையடுத்து, திருடனும் அந்த மாட்டுத் தலையை அம்மன் சொன்னபடி, அங்கே கொண்டு சென்று கூடையில் வைத்து மூடி மறைத்து வைக்கிறான். அதிகாரிகளும், ஊர் பொதுமக்களும் திருடனை பார்த்து நீ காராம் பசு மாட்டை கொன்றாயா? என கேட்டதற்கு நான் பசு மாட்டை கொல்லவில்லை. மானை தான் கொன்றேன், என திருடன் சொல்லி விடுகிறான். அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், கிராம பொதுமக்கள் அந்த மான் எங்கே என்று கேட்க மாரிபுத்தூர் ஏரிக்கரை அருகில் ஈச்சம் புதரில் மறைத்து வைத்துள்ளேன், என்றான்

மாட்டுத் தலையை மறைத்து வைத்திருந்த இடத்தை காண்பித்த போது அதிகாரி அந்தக் கூடையை எட்டு உதைக்க அந்த கூடையில் இருந்த மாட்டுத்தலை மான் தலையாக மாறி இருந்தது. அதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர், அதன் அருகிலேயே உள்ள அம்மன் சிலையை பார்த்து அனைவரும் வணங்கினர். பின்பு, மாட்டுத் தலையை மான் தலையாக மாற்றிய மாரிபுத்தூர் செல்லியம்மன் என்று பெயர் சூட்டினர். மேலும், இதே போன்று மாரிபுத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வளையல் வியாபாரி ஒருவர் இருந்துள்ளார். வளையல் வியாபாரம் சரியாக நடைபெறவில்லை, என செல்லியம்மனிடம் மனம் உருகி வேண்டினான். அன்றே வளையல்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விடுகிறது. அன்று மாலையை குடிபோதையில் என் உழைப்பால் தான் வளையல்கள் அனைத்தும் விற்று விட்டது, உன்னிடம் வேண்டியதால் இல்லை, என அம்மன் சிலை முன்பு வலையில் வியாபாரி கூறியுள்ளான்.

அதேபோன்று அந்த கோயில் வழியாக மீண்டும் வளையல் வியாபாரி சென்ற போது அழகான பெண் குளிப்பதை பார்த்த அந்த வளையல் வியாபாரி உனக்கு வளையல்களை இலவசமாக அணிவிக்கிறேன் உன் மீது ஆசையாக உள்ளது எனக் கூறியுள்ளான் உடனே அம்மன் பிடாரியாக மாறி அந்த வளையல்காரனை வெட்டி இரண்டாக கிழித்து காலால் மிதித்து அழிக்கப்பட்டான். இந்த அற்புதங்களை அறிந்த அந்த கிராம மக்கள் சிறிய கொட்டகையில் இருந்த செல்லியம்மனுக்கு பெரிய கோயிலாக கட்டி ஆடி மாதம் முதல் செவ்வாய் அம்மனுக்கு காப்பு அணிவித்து இரண்டாவது செவ்வாய் திருக்கல்யாணம் செய்து திருத்தேர் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதில், செவ்வாய்கிழமையான நேற்று இரவு 9 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம், வாணவேடிக்கை, அலங்கார வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று காலை பக்தர்கள் தரிசனம் மற்றும் திருத்தேர் வீதி உலா, இரவு நாடகம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேக அலங்காரமும் ஆராதனையும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வேலூர் நாயகன், செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!