சேத்துப்பட்டு அருகே செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தல்

*நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

பெரணமல்லூர் : சேத்துப்பட்டு அருகே செய்யாற்று ஆற்றுப்படுகையில் மாட்டுவண்டி, லோடு ஆட்டோ, மினி லாரி மூலம் மணல் கடத்தல் தீவிரமடைந்து வருவதால் நடவடிக்கை எடுக்க விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையொட்டி விவசாயிகள் விளைநிலங்களில் பயிர்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆற்றுப்படுகை ஒட்டி உள்ள சில இடங்களில் மாட்டு வண்டியில் மணல் கொள்ளையர்கள் மணலை திருடி விற்று வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மணல் கொள்ளை குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், ‘எங்கள் பகுதி வழியே செல்லும் இந்த ஆற்றுபடுகையையொட்டி விவசாயிகள் பலர் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பொய்த்த நிலையில் இங்குள்ள விளை நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. ஆனால் ஆற்றுக்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் கிணறுகளில் உள்ளது. இதனை நம்பி தற்போது நாங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் எங்கள் பகுதியில் உள்ள ஒரு சிலர் இரவு நேரங்களில் ஆற்றுப்படுகையில் இறங்கி மணலை திருடி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.‌ குறிப்பாக ஆற்றுப்படுகை ஒட்டியுள்ள மேட்டுக்குடிசை, சாணார்தோப்பு மற்றும் உள்ளூர்வாசிகள் சிலர் இரவு நேரங்களில் மாட்டு வண்டியுடன் ஆற்று படுகையில் இறங்கி வளமான மணலை திருடி அருகில் ஏதாவது ஒரு பகுதியில் பதுக்கி வைக்கின்றனர்.‌ பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரும் மினி லாரி, லோடு ஆட்டோ மூலமாக அந்த மணலை வெளியிடங்களுக்கு விற்று வருகின்றனர். குறிப்பாக இங்கிருந்து செல்லும் கொள்ளை மணல் அருகிலுள்ள தேவிகாபுரம், போளூர், ஆரணி, கூடலூர், சதுப்பேரி மற்றும் களம்பூர் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மணல் கடத்தல் குறித்து நாங்கள் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் அவர்கள் இங்கு வருவதற்குள் கொள்ளையர்களுக்கு தகவல் தெரிந்து தப்பித்துக் கொள்கிறார்கள். முக்கியமாக இந்த ஆற்று படுகையை ஒட்டி தச்சூர் பகுதியில் செல்லும் ஆற்றுப்படுகையில் தாறுமாறாக மணல் கொள்ளை நடந்து வந்தது. அப்பகுதி மக்கள் மாவட்ட அதிகாரி மூலம் ஆரணி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கவே தற்போது மணல் கொள்ளை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள மணல் மாபியாக்கள் இந்தப் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தனர். எனவே மணல் வளம் காக்கவும், விவசாயத்தை காக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்