அடித்தட்டு மக்களுக்கான திரைப்படம் எடுக்க வேண்டும்! : நாவலாசிரியர் டெய்சி மாறன்

‘‘அப்பாவைப் போல மேனேஜ்மென்ட் ஸ்கூல் நடத்தி இலவசக் கல்வி இலவச மருத்துவமனை என்று மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும்” என்பதுதான் எனது லட்சியம் என்கிறார் நாவலாசிரியரும் எழுத்தாளருமான டெய்சி மாறன். இதுவரை 90 நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், கதை, கட்டுரை,கவிதை, குறுநாவல் என எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன. எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிற டெய்சி மாறன் நம்மிடையே பகிர்ந்து கொண்ட திலிருந்து….

எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போது ஏழு கல்லூரிகள் இணைந்து நடத்திய கவிதை போட்டியில் ‘‘சுதந்திரம்” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதைக்கு முதல் பரிசு கிடைத்த போது தான் எழுத்தின் மீதான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. என்னை ஊக்கப்படுத்தி போட்டியில் கலந்து கொள்ள வைத்த என்னுடைய தமிழ்ப் பேராசிரியை புஷ்பராணி மேடம் அவர்கள் தான் எனது வழிகாட்டி. அதன் பிறகு ‘டெய்சி மாறன்’ என்ற பெயரில் சுமார் 20 வருடங்களாக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறேன். என்னுடைய முதல் நாவல் எழுத ஆரம்பித்து 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்த ஏழு வருடங்களில் எல்லா இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.

உங்களது படிப்பு வேலை மற்றும் குடும்பம் குறித்து?

நான் இளங்கலை கணிதம் முடித்திருக்கிறேன். பிறகு திருமணமாகி சென்னைக்கு வந்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு வீட்டில் இருந்தபடியே 12-ம் வகுப்பு வரை (கணிதப் பாடம்) டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தேன். குடும்பம் கணவர் அஞ்சல் துறையில் வேலை செய்கிறார். முதல் மகன் கல்லூரியிலும், இரண்டாவது மகன் பள்ளியிலும் படித்துக் கொண்டிருக்கிறார்.

போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்கள்?

போட்டிகளில் பங்கேற்பது என்பதே மகிழ்வான விஷயம் தான். அதில் பரிசும் பாராட்டும் கிடைக்கிறதென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே. பொதுவாக அனைத்துப் போட்டிகளிலும் பற்கேற்பேன். வெற்றி தோல்வி குறித்தெல்லாம் கவலை கொள்வதில்லை. பங்கேற்பே வெற்றிதானே. தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி, எழில் கலை மன்றம் நடத்திய சிறுகதை போட்டி, சஹானா இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டி மற்றும் பிரேமா நாவல்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன். மேலும் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், ஒரு அரசு நூலக விருதினையும் வாங்கி இருக்கிறேன். 2020 ஆம் ஆண்டு டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய சிறுகதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது பெரும் மகிழ்வான விஷயமாக இருந்தது.

எந்த மாதிரியான நாவல்கள் எழுதி வருகிறீர்கள்?

இதுவரை எழுதிய நாவல்களில் குடும்பம் சார்ந்த கதைகள் தான் அதிகம். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவுகளாக எழுதுவதே எனது பாணி எனலாம். எழுத்துக்களின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு நல்ல தகவலை தர வேண்டும் என்ற நோக்கத்தோடும் தான் அனைத்தையுமே எழுதிவருகிறேன்.

வேறு எங்கெல்லாம் எழுதிவருகிறீர்கள்?

எனது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பிரபல இணையதளங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாக்கெட் எஃப்எம் என்ற தளத்தில் ஆடியோ ஸ்கிரிப்ட்டில் நீண்ட நெடும் தொடர் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது. தற்போது திரைப்படம், குறும்படம், மற்றும் பிரபல தனியார் தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு திரைக்கதை (உதவி) எழுதிக் கொண்டும் இருக்கிறேன்

உங்களுக்குக் கிடைத்த விருதுகள் குறித்து…

காரைக்கால் அம்மையார் விருது
இலக்கியச்சோலை இமயம் விருது
தமிழ் எழுத்தாளர் ஒன்றிணைப்பு விருது
தென்சென்னைத் தமிழ்ச்சங்கம் கவி திலகம் விருது
வானதி விருது 2016
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை(அரசு விருது)
அன்னை கல்வி அறக்கட்டளை சமூக சேவை விருது.
அன்னை சத்தியவாணி முத்து
நூற்றாண்டு நினைவு விருது.
எழுத்தாளர் ஜெயகாந்தன் விருது (மலர்க்கண்ணன் பதிப்பகம்)
எழுத்துச் செம்மல் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றது எனது எழுத்தினால் நான் பெற்ற நற்பலன்கள் எனலாம்.

எதிர்கால ஆசைகள் லட்சியங்கள் குறித்து?

எழுத்துத் துறையில் இன்னமும் நிறைய சாதிக்க வேண்டும். அதில் பல உயரங்களைத் தொடவேண்டும் என்கிற ஆசைகள் உண்டு. நிறைய சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுத வேண்டும் என்கிற லட்சியம் இருக்கிறது. நிறைய வெப்சீரியல்களுக்கும் கதை எழுதும் ஆர்வம் உள்ளது. முக்கியமாக வெள்ளித்திரைக்கு கதை எழுத வேண்டும் என்பது எனது பெரும் ஆசைகளில் ஒன்று. அடித்தட்டு மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்கிறார் டெய்சி மாறன்.
– தனுஜா ஜெயராமன்

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா