மனைவியை பணியில் நீக்கியதால் ஆத்திரம் டாக்டரை 18 முறை அரிவாளால் வெட்டிய கணவர்: மருத்துவமனைக்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல்

மும்பை: மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை 18 முறை அரிவாளால் வெட்டிய சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் பஞ்ச்வதி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாகர் கைலாஷ் ரதி (48), கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த நபர், கைலாஷ் ரதியை கூரிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கினார். கிட்டத்தட்ட 18 முறை அரிவாளால் வெட்டப்பட டாக்டர் கைலாஷ், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். கைலாஷ் ரதியின் அலறல் சட்டம் கேட்ட அங்கிருந்தவர்கள் விரைந்து வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த கைலாஷ் ரதி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர் அதே மருத்துவமனையில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியரின் கணவர் என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட முன்னாள் பெண் ஊழியர் 12 லட்ச ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததால் சமீபத்தில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மனைவியை வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்த கணவர் மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது தெரியவந்தது. அதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு