5வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

 

தஞ்சாவூர், டிச.31: தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி, தஞ்சாவூர் சிலம்பம் கமிட்டி, நான் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ரிதன் பிரின்சி விக்டரி அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 5வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் ( பி.ஆர்.பி.எஸ் ) நடைபெற்றது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி மாநில செயலாளர் அர்ஜுன் செய்திருந்தார். போட்டியை பள்ளி முதல்வர் அலோசியஸ் ஹென்ரி தொடங்கி வைத்தார். இதில் தஞ்சாவூர் உள்பட 24 மாவட்டங்களை சேர்ந்த 5 வயது முதல் 30 வயது வரையிலான 1700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிலம்பம் மட்டுமின்றி வாள்வீச்சு, சுருள்வால், வேல் கம்பு, குத்து வரிசை ஆகிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. வீரர், வீராங்கனைகளுக்கு வயது வாரியாக தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து வென்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அனைத்து விளையாட்டு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இதில் வெற்றி பெற்றவர்கள் தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி மாநில தலைவர் பாலமுருகன், செயலாளர் அர்ஜுன், தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா தொழில்நுட்ப இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி