5ம் தேதி கரையை கடக்கும் நாளை உருவாகிறது புயல்: திருவள்ளூர் மாவட்டத்துக்கு ‘ரெட் அலர்ட்’

சென்னை: வங்கக் கடலில் சென்னைக்கு 780 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும் என்றும், அது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக மாறி, 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் தேதி சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நேற்று முன்தினம் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை அம்பத்தூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, காட்டுமன்னார் கோவில், கொடுமுடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் 50மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், மயிலாடுதுறை, சென்னை தேனாம்பேட்டை, திருக்குவளை, திருப்பூண்டி, சென்னை கொளத்தூர், கோடம்பாக்கம் 40 மிமீ, மாமல்லபுரம், வாடிப்பட்டி, பெருங்குடி, சென்னை எம்ஜிஆர் நகர், திருவிக நகர், ஆவடி, கடலூர் லால்பேட்டை, சென்னை அண்ணா நகர், பெரம்பூர், முகலிவாக்கம், ஆலந்தூர், தாம்பரம், ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுக்குன்றம், செம்பரனார்கோவில், எறையூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம், சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் 30 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை பெய்த வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் இயல்பாக 357.6 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 336 மிமீ தான் பெய்துள்ளது. இது இயல்பைவிட 6% குறைவு. மேலும், வங்கக் கடலில் நேற்று வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து சென்னைக்கு கிழக்கு- தென் கிழக்கே சுமார் 780 கிமீ தொலைவிலும், பாபட்லாவிற்கு தென்கிழக்கே சுமார் 960 கிமீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 940 கிமீ தொலைவிலும் நேற்று நிலை கொண்டு இருந்தது.

இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன் பிறகு நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ம் தேதி மாலை அல்லது 5ம் தேதி அதிகாலையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் சென்னை-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

நாளை மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும். 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாற உள்ளதால் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 கிமீ முதல் 70 கிமீ வேகத்தில் வீசும். 4ம் தேதியில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று 70 கிமீ வேகத்திலும், இடையிடையே 80 கிமீ வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 70 கிமீ வேகத்திலும் வீசும்.

அதேபோல கடலிலும் சூறாவளிக்காற்று அதிக அளவில் வீசும் என்பதால் மீனவர்கள் வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர். இந்த புயலை எதிர்க்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பிறகு மாவட்ட கலெக்டர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் மீட்பு நடவடிக்கைள், முன்னெச்சரிக்கை நடவடிவக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

* வங்கக் கடலில் தற்போது உருவாக உள்ள புயலுக்கு மியான்மர், ‘மிக்ஜம்’ என்று பெயரிட்டுள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டுப் பகுதிக்கு வராமல் மியான்மர் நோக்கி செல்லும் என்று உலக வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் காற்றின் திசை மாறுபாடு காரணமாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

* இந்த புயல் மூலம் தமிழ்நாட்டுக்கு அதிக மழை கிடைக்கும் என்பதால் ‘தண்ணீர்ப் புயல்’ என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் இது மற்ற புயல்கள் போல வேகமெடுத்து மரம், செடி,கொடிகள், குடிசை வீடுகள் போன்றவற்றை சாய்ப்பது, தூக்கி வீசுவது போன்ற கோரத்தாண்டவம் ஆடாது என்று நம்பலாம்.

* வட கிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் டிசம்பர் 23ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல இந்த மாத இறுதியிலும் வலுவான ஒரு காற்றழுத்தம் உருவாகும் வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள தமிழ்நாட்டுக்கு மழை கொடுக்கும் முதல் புயல் இதுதான்.

* மாலத்தீவு, இலங்கை, அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்று சுழற்சி ஒன்றிணைந்து தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறிவிடும். பின்னர் 3ம் தேதி தான் புயலாக (மிக்ஜம்) மாறும்.

* இந்த புயல் வங்கக் கடலில் சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையில்தான் புயலாக இருக்கும். அதற்கு பிறகு மெதுவாக மணிக்கு 75 கிமீ வேகம் என்ற கணக்கில் குறைவான வேகம் கொண்ட காற்றுடன் 4ம் தேதி இரவு அல்லது 5ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கும்.

* இது கரையை நெருங்கும் போதுதான் புயலாக இருக்கும். தரையை தொட்டதும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

* பெரும்பாலும் இந்த புயல் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்க உள்ளது.

* இது வட உள் மாவட்டங்கள் வழியாக கர்நாடகா பகுதிக்கு செல்லும். அதனால் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் அதிக மழை பெய்யும்.

* பள்ளிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுவை, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி