குடும்பம், டப்பு மணி… மணி… அன்புமணியை விளாசிய சி.வி.சண்முகம்

மக்களை பொதுத்தேர்தலில் பாமகவை, அதிமுக கூட்டணியில் இழுக்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி தைலாபுரம் தோட்டத்தில் 2 முறை நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கடைசியில் பாஜவோடு, பாமக கூட்டணியில் இணைந்துவிட்டது. அதிமுகவுக்கு அல்வா கொடுத்த நிலையில் அக்கட்சி தலைமை கடும் அப்செட்டில் இருக்கிறதாம்.

குறிப்பாக 2 முறை சென்று தோட்டத்து கதவை தட்டிய சி.வி சண்முகம்தான் தற்போது கூடுதல் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பாமகவை சிவி.சண்முகம் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி பேசுகையில்,‘நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று பதவி வகித்த துரோகிகள் அந்த சின்னத்தை முடக்க நினைக்கிறார்கள். அதிமுகவிற்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது. திருச்சியில் வரும் 24ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது. இங்கு ஒருவர் (அன்புமணி) தேசியமும், தமிழும் என்று பேசி வருகிறார். இன்றைக்குதான் அது தெரிகிறதா. தேசியமும் இல்லை, தமிழும் இல்லை, ஒன்னும் கிடையாது.

வெறும் குடும்பம், குடும்பம்தான், டப்பு, மணி… வேறு ஒன்றும் கிடையாது. நமக்கு அதைபற்றி கவலையில்லை. நமக்கு மேலிருக்கின்ற ஒரு பாரம் (பாமக) நீங்கிவிட்டது. சிலர் செய்திருக்கின்ற தவறுகள், சிலர் மேல் இருக்கின்ற கோபம் நம்பளை பாதிக்கின்றது. நாம் யாரை பற்றியும் பேசவேண்டாம். ஜெயலலிதா, எம்ஜிஆர், இரட்டை இலை சின்னத்தை சொல்லி வாக்கு கேட்போம். தெளிவாக, திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்,’என்றார்.

* ஒன்றிய அரசு துரோகத்த சொல்லி ஓட்டு கேளுங்க…
‘நாட்டில் 10 ஆண்டு காலம் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கலைத்தும், கட்சியை உடைத்தவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. நமக்குள் இருக்கும் ஒற்றுமைதான் காரணம். ஒன்றிய அரசு செய்த துரோகத்தை மக்களிடையே எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர் இன்றைக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்’ என்று சி.வி.சண்முகம் பேசினார்.

* ஊழல் வழக்கில் இருந்து தப்பிகவே அன்புமணி பாஜவுடன் கூட்டணி
நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசுகையில், ‘இட ஒதுக்கீடு என்றாலே அறவே வேண்டாம் என பாஜ சொல்லுகிறது. ஆனால் அந்த கட்சியோடு இட ஒதுக்கீட்டிலே பிறந்து வளர்ந்த ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். இதில், இருந்து இந்த கூட்டணி கொள்கையே இல்லாத கூட்டணி என தெரிகிறது. அன்புமணி ராமதாஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்,’என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு