மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: அதிமுக மாஜி அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம், 12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களின் போது தமிழக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து சி.வி.சண்முகத்துக்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒன்றிய அரசை கண்டு தமிழ்நாடு அரசு பயப்படுவதாக கூறியது உட்பட இரு வழக்குகளை ரத்து செய்தார். இருப்பினும் மற்ற இரு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அசானுதீன் அமனுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுவெளியில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவருக்கு எதிராக அவதூறாக பேசியது என்பது அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். எனவே இந்த விவகாரத்தில் சி.வி.சண்முகத்திற்கு எந்தவித நிவாரணமும் வழங்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,மக்கள் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு, இதுபோன்ற மோசமான பேச்சை சி.வி.சண்முகம் பேசியுள்ளார். அவரது பேச்சை நாங்களும் பார்த்தோம்.

எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?. குறிப்பாக எதிர்காலத்தில் இதுபோன்று பேசமாட்டேன் என்று பிரமாணப் பத்திரமாக எழுதித்தர வேண்டும்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சி.வி.சண்முகத்தின் பேச்சு மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே இவ்வழக்குகளை நூறு சதவீதம் ரத்து செய்ய முடியாது. மேலும் தவறை உணரவில்லை என்றால், வழக்கு விசாரணையை அவர் கண்டிப்பாக எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் அக்.15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது

அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு கர்நாடக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்த சித்தராமையா அரசு முடிவு