நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாம் தமிழர் கட்சியின் பெண் பிரமுகரின் முதல் கணவரை சரமாரியாக வெட்டிய வழக்கில், இரண்டாவது கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முதல் கணவரின் சொத்துக்கள் தன்னிடமிருந்து பறிபோய்விடும் என்ற ஆத்திரத்தில் நா.த.கட்சியின் பெண் பிரமுகர் இச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாநல்லூர் ஏ.கே.வி நகரை சேர்ந்தவர்கள் ஹரிபாரதிதாஸ்-இந்திரா தம்பதி. இவர்களது மகன் ரோக்கேஷ்(43). சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வரும் இவருக்கும், கும்பகோணம் பழைய அரண்மனைத்தெருவை சேர்ந்த ராஜன்-நிர்மலா தம்பதியினரின் இளைய மகள் திவ்யாவுக்கும்(35) கடந்த 15.5.2013ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயது மகள் உள்ளார். திவ்யா நாம் தமிழர் கட்சி பிரமுகர். குடந்தை மாநகராட்சி தேர்தலில் அந்த கட்சி சார்பாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் ரோக்கேஷை நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் ரோக்கேஷ் தெரிவித்ததாக கும்பகோணம் கிழக்கு போலீசார் கூறியதாவது: ரோக்கேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், அவரை சந்திக்க அவ்வப்போது விசிட்டிங் விசாவில் மனைவி திவ்யா சிங்கப்பூர் சென்று வந்தார். அவ்வாறு வரும்போது சிறுக சிறுக சுமார் 200 பவுன் நகைகளை கணவரிடமிருந்து வாங்கி வந்துள்ளார். மேலும், ரோக்கேஷ் தனது வங்கி கணக்கில் இருந்து, திவ்யாவின் வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.2 கோடியே 81 லட்சம் அனுப்பியுள்ளார். அந்த பணத்தில் திவ்யா, தனது மற்றும் தனது பெற்றோர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.

இந்நிலையில், திவ்யாவிற்கு, அரசு மதுபான கடை பாரில் சப்ளையராக பணிபுரியும் இன்னம்பூர் மேலத்தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற தன்னை விட வயது குறைவான வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்த திவ்யா கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே திவ்யா, நந்தகுமாரை இன்னம்பூர் காளியம்மன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி கிராம நடைமுறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 7-12-2023ல் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஷண்மிதா என பெயர் சூட்டினர். மேலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதல் கணவருக்கு தெரிந்துவிட்டதால், எங்கு சொத்து, நகைகள் போய்விடுமோ என அஞ்சி, கணவர் ரோக்கேஷிற்கு அவ்வப்போது கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டானா பகுதியில், ஒரு ரவுடி கும்பல் ரோக்கேஷை தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே கல்லூரி ரவுண்டானா பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர், ரோக்கேஷை படுகொலை செய்யும் முயற்சியில் வெட்டியுள்ளனர். எனவே தனது மகள் தீப்தாவை தன்னிடம் அனுப்ப வேண்டும், மனைவி திவ்யாவுக்கு கொடுத்த ரூ.2 கோடி 81 லட்சம் மற்றும் தன்னிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கிய வீடு மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும் என வாக்குமூலத்தில் ரோக்கேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு பதிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், நந்தகுமார் (31), சிவானந்தம்(25), அண்ணாதுரை(29) மற்றும் மதன் (22) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு