மீண்டும் குட்டு

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப், புதுடெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், ஆளுநர்களால் பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. கேரளாவில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே மிகவும் விரும்பத்தகாத மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதே போக்கை கடைபிடித்து வருகிறார். அதனால், அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி தமிழ்நாட்டை சேர்ந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு, ஆளுநர்கள் உண்மையானவர்களாக இருக்கவேண்டும். சட்டமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்போது, ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்திவைப்பது, பொதுநலனுக்கு கேடு விளைவிக்கும் செயல் ஆகும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்வதால், தமிழ்நாடு அரசு, வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநருக்கு மீண்டும் குட்டு வைத்துள்ளது.

அதாவது, ‘‘மத்திய அரசின் நியமனமாக இருக்கும் ஆளுநர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள மூன்று விருப்பங்களில் ஒன்றை பயன்படுத்த வேண்டும். மாறாக, சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநருக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து பேசி, இதை தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். முதலமைச்சரை ஆளுநர் அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன், ஆளுநர் மோதல் போக்கை கடைபிடிக்ககூடாது என உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி, மக்கள் நலனுக்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதே நல்லது.

இல்லையேல், அரசியலமைப்பு ஒழுங்கு பலவீனமடைவதற்கான குழப்பமான நிலை உருவாகும். ஆளுநரின் அரசியல் சாசன பதவி என்பது தீர்க்கப்பட்ட விஷயம். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளின் பல தீர்ப்புகள் மூலம் ஆளுநரின் அதிகாரங்களும், செயல்பாடுகளும் நன்கு தீர்க்கப்பட்டுள்ளன. இதை உணர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட வேண்டும். உண்மையான கூட்டாட்சி என்பது இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுகிறது. அதையும், உணர்ந்து செயல்படுவது நல்லது.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி