2 டன் தைல மரத்தை வெட்டி, கடத்த முயன்று மாட்டிக்கொண்ட இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தப்பு செஞ்சிட்டு காட்டுக்கும் போக முடியாம, வீட்டுக்கும் போக முடியாம தவிக்கும் இலைகட்சிக்காரரை பற்றி சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல அணையான தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுக்கமான ஊர்ல ஆயிரக்கணக்கான ஏக்கர்ல காடுகள் பரந்து விரிஞ்சு பசுமை நிறைந்து இருக்குது. அந்த பஞ்சாயத்து கவுன்சிலரோட ஹஸ்பண்ட் இலை கட்சியில ஒரு முக்கிய பிரமுகராக இருக்காராம். இவருக்கு சொந்தமாக வனத்தையொட்டி கொஞ்சம் நிலங்களும் இருக்குதாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வனத்துறைக்கு சொந்தமான இடத்துல இருந்த 2 டன் தைலமரத்தை வெட்டி கடத்த முயற்சி செஞ்சிருக்காரு. இதை எப்படியோ கண்டுபிடிச்ச வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு போய் மரத்த பறிமுதல் செஞ்சாங்க.

ஆனா, அதிகாரிங்க வர்றத பார்த்து அந்த கவுன்சிலரோட ஹஸ்பண்ட் தப்பியோடி, இப்ப காட்டுக்கும் போக முடியாம, வீட்டுக்கும் போக முடியாம திண்டாடி வர்றாராம். சரி எப்படியாவது இந்த சிக்கல்ல இருந்து தப்பிக்கணும்னு அந்த ஊர்ல இருக்குற பெரிய தலைங்க கிட்ட போய் விஷயத்தை சொல்லி இருக்காரு. அதற்கு அவங்களும் அதிகாரிங்க கிட்ட எவ்வளவோ முட்டி மோதி பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாம கைவிரிச்சிட்டாங்களாம். சரி அபராதமாவது கட்டி சிக்கல்ல இருந்து தப்பிக்கலான்னு பார்த்தா, செஞ்ச தப்புக்கு கைது கன்பார்ம்னு சொல்லி வனத்துறையினர் வலைய வீசி தேடி வர்றாங்களாம். இந்த மேட்டர பத்திதான் அணையான தாலுகாவுல பரபரப்பாக ேபசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாஜி மந்திரிகளுக்குள்ள போட்டாபோட்டியாமே..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சியின் மாஜி மந்திரிகளான உளறல் மற்றும் ஊர்ப்பெயர் கொண்டவர்கள் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கட்சி நிர்வாகத்தில் இருக்கின்றனர். வரும் எம்பி தேர்தலில் ஊர்ப்பெயர் கொண்டவர், தனது மைத்துனருக்கு சீட் கேட்டிருக்கிறார். இது உளறல் மாஜிக்கு டென்ஷனை தந்துள்ளது. ‘ஒன்றிய பெருந்தலைவர் பதவியை காப்பாற்ற முடியாதவருக்கு எம்பி சீட்டா? முடியாது. தனது வாரிசு அல்லது தான் கை காட்டும் நபருக்கே சீட் தர வேண்டுமென கூறி வருகிறாராம்.

அதற்கு ஊர்ப்பெயர் மாஜியோ, இவர் தேர்தல், பொதுக்கூட்டம் என்றால் கைக்காசை செலவு செய்ய மாட்டார். ஏதாவது உளறிக் கொட்டி கட்சி பெயரை கெடுத்துடுவாரு.. .இதுல இவர் கை காட்டுற நபருக்கு சீட் தரணுமா? என் மைத்துனருக்கு தராவிட்டாலும் பரவாயில்லை. வேற யாருக்காவது சீட் தாங்க… என தலைமையிடம் தன் தரப்பிலும் புகார்களை அள்ளி வீசியிருக்கிறார். இருதரப்பிலும் மாறி, மாறி புகார்களை வீசுவதால், பேசாமல் இருவருக்கும் நெருக்கமில்லாத புதியவர் ஒருவருக்கு சீட் தரலாம். கட்சி வேலையாவது சுறுசுறுப்பாக பார்ப்பார் என தலைமை எண்ணுகிறது. இதனையறிந்த சிலர், தலைமையிடம் தங்களுக்கு சீட் கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கி விட்டனராம்…தென்மாவட்டம் ஓவர் குடைச்சல் தருதே என சேலத்துக்காரர் புலம்புகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வைத்தி ஆதரவாளர்கள் ஏன் குஷியா இருக்காங்களாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தை சேர்ந்த தேனிக்காரரின் வலது கையாக இருந்து வரும் இலை கட்சியோட மாஜி அமைச்சரான வைத்தியானவர் சில நாட்களுக்கு முன்னால தனது ஆதரவாளர்களோட ஆலோசனை நடத்தினார். அப்போ அவங்களுக்கு முக்கிய அசைன்மெண்ட் கொடுத்தார். நம்மகிட்ட இருந்து பிரிஞ்சு போனவங்கள மீண்டும் நம்மபக்கம் இழுக்கணும், இதுக்காக விட்டமின் ப உள்ளிட்டவை குறித்து கவலப்பட வேண்டாம் என தெரிவித்தாராம். இதனால அவரோட ஆதரவாளர்கள் குஷியா இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஐபிஎஸ் அதிகாரிகளை களையெடுக்கும் வேலை ஆரம்பித்து விட்டது போல..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் இருந்த டிஜிபி திரிபாதியை அப்படியே தொடரட்டும் என்று விட்டனர். இந்த நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளாமல், சில அதிகாரிகளை துணைக்கு வைத்துக் கொண்டு அதிமுகவுக்கு வேண்டிய அதிகாரிகள் பலரையும் முக்கியமான பதவிகளில் நியமித்து விட்டனர். அதில் பலர் சட்டம் ஒழுங்கு வேலை தெரியாதவர்கள், லஞ்ச ஊழலில் திளைத்தவர்களும் வந்து விட்டனர். தற்போது அவர்களை எல்லாம் களை எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திறமைக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து மாவட்ட எஸ்பிக்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று வெளியிட்ட 5 முக்கிய பதவி நியமனங்களில் சென்னை அருகே உள்ள பகுதியில் துணை கமிஷனராக இருந்தவர் மாற்றப்பட்டு டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி தொடரும் என்று கூறப்படுவதால் ஒரு சில அதிகாரிகள் தொடர்ந்து பீதியில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி