நடப்பு ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.7 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் உள்ள பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. மக்களவையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சர்வதேச சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் தொடர்ந்து 3வது ஆண்டாக பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் மேல் காணப்படுகிறது. அகில இந்திய அளவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, கொரோனா பரவல், ஊரடங்கு முடிந்த பிறகு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தபடி இயல்பான மழைப்பொழிவு காரணமாக தென்மேற்கு மாநிலங்களில் விவசாயம் மேம்பாடு மற்றும் ஊரக தேவைகள் அதிகரிப்பதை எதிர்பார்க்கலாம். 2019-20 நிதியாண்டில் கொரோனாவுக்கு முன்பிருந்ததை ஒப்பிடும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 2020-21ல் கொரோனாவால் பொருளாதாரம் 5.8 சதவீதம் சரிந்தபோதும், மீண்டும் மேம்பாடு அடைந்துள்ளதை காண முடிகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பாதிப்பின் எதிரொலியாக, தகவல் தொழில்நுட்ப துறை மந்தம் அடைந்தது.

அதேநேரத்தில், இந்த துறையில் புதிதாக ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைகள் குறையாமல் இருந்தாலும் கூட, இத்துறை குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு இல்லை என்றுதான் கூற வேண்டும். இருப்பினும், இதனை சீர் செய்வதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும், பருவமழையின் எதிர்பாராத போக்கின் காரணமாகவும் 2022-23 நிதியாண்டில் சில்லரை விலை பண வீக்கம் 6.7 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 5.4 சதவீதமாக குறைந்து விட்டது. நாட்டின் தொழில் துறை வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் 5.2 சதவீத சராசரி வளர்ச்சியுடன் முன்னிலை வகித்து வருகிறது.

தொழில் துறையின் நிகர மதிப்பு 13.4 சதவீதமாகவும், உற்பத்தியின் பங்களிப்பு 35.2 சதவீதமாகவும் இருப்பது அனைத்து நிலைகளிலும் தொழில் துறை மேம்பட்டு வருவதை குறிப்பதாக உள்ளது. நாட்டின் 47.5 சதவீத மொத்த உற்பத்தி மதிப்பில் பெரும்பாலான மூலப்பொருட்கள் உள்நாட்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டுளளது. விவசாயம், தொழில், சேவை துறைகளில் அனைத்து உற்பத்தி சார் நடவடிக்கைகளிலும் 50 சதவீதம் உள்நாட்டு பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. “இந்தியாவின் மின் பகிர்மானம் மாநிலங்களுக்கிடையே 1,18,740 மெகாவாட் திறனுடன் ஒரே தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே மிகப்பெரிய மின்தொகுப்பாக உருவெடுத்துள்ளது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் மூலம் ஆட்டோமொபைல் துறையில்ரூ.67,690 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை இந்த துறையில் ரூ.14,043 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.48 லட்சம் கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய 85 நிறுவனங்களின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விமானத் துறையை பொறுத்தவரை, விமான நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். விமான நிலைய திறனை மேம்படுத்த வேண்டும். கடந்த ஆண்டில் விமான பயணிகள் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நிதித் துறையின் எதிர்காலம் சிறப்பாக தோன்றினாலும், பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதித் துறை முக்கியமான மாற்றத்திற்கு உள்ளாகும் போது, அதற்கேற்ப ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். எரிசக்திக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிலக்கரிதான் முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை சார்ந்திருக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காக மாற்று உற்பத்தி ஆதாரங்கள் அதிகரிக்கும்போது இறக்குமதி தேவை குறையும். இதற்கேற்ப பல்வேறு ஊக்கத் திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. 2030ம் ஆண்டுக்குள் வேளாண் அல்லாத துறைகளில் ஆண்டுக்கு 78.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 6.7 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து வரும் அந்நிய நேரடி முதலீடு, சர்வதேச சந்தையில் இந்தியாவின் வர்த்தக பங்களிப்பு அதிகரிக்க உதவும். கட்டாய தர விதிமுறைகள் மற்றும் சுங்க வரிகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் உள்நாட்டு பொம்மை நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், சீன இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கவும் உதவியுள்ளன. சீனாவிலிருந்து பொம்மைகள் இறக்குமதி 2012-13 நிதியாண்டில் மொத்த பொம்மை இறக்குமதியில் 94 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 64 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2016ல் 300 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் 117,254ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 12.42 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஏஐயால் வேலையிழப்பு
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம், பல்வேறு துறைகளிலும் வியாபித்து வருகிறது. சில வேலைகளை எளிதாக முடிக்க ஏஐ தொழில்நுட்பம் வெகுவாக உதவுகிறது. எனவே, ஏஐ தொழில்நுட்பம் படிப்போருக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி துறை போன்றவற்றில் ஏஐ தொழில்நுட்பம் அதிக பயன்பாடுள்ளதாக அமைகிறது. இருப்பினும் சேவைகள் துறை, பிபிஓ உள்ளிட்ட பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு அபாயம் உள்ளது என்பதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

* காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்
பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாம் முறையாக பதவி ஏற்ற பிறகு ஒன்றிய அரசின் பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று அவர் தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் மீதான விவாதம் நாளை முதல் நடைபெறும். இரு அவைகளிலும் தலா 20 மணி நேரம் விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

* பணவீக்க பட்டியலில் உணவு பொருட்களை நீக்க முடிவு
நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், பண வீக்கத்துக்கு உணவுப் பொருட்கள் விலை உயர்வு முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்புக்குள் பண வீக்கத்தை கட்டுக்குள் வைக்க உணவுப்பொருட்களை பண வீக்க பட்டியலில் இருந்து நீக்க பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* வேளாண் துறையில் 5 அம்ச கொள்கைகள்
1960ம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உணவு பாதுகாப்பு என்பதில் இருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற நிலைக்கு முன்னேற்றம் பெற வேண்டிய தருணம் இது. அடிப்படை உணவு தேவையை விட பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பழ வகைகள், காய்கறிகள், பால், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

உணவுப் பொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் துறைக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உணவு பொருட்கள் விலையை குறிப்பிட்ட சரியான அளவில் வைத்திருத்தல் ஆகிய இரண்டையும் சமநிலைப் படுத்தும் வகையில் கொள்கைகள் வகுக்க வேண்டும். விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு வேளாண் விளைப் பொருட்களுக்கான சந்தை செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் 5 அம்ச கொள்கைகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு