நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.28 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ஆண்டு வளர்ச்சி விகிதம் 11.66% உயர்வு; தமிழ்நாடு முதலீட்டுக் கழகம் தகவல்

இந்தியாவில் 4வது மிகப்பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டிலேயே தொழில்துறையில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக திகழும் தமிழ்நாடு, ஆட்டோமெபைல், வாகன உதிரிபாகங்கள், மருத்துவம், ஜவுளித்தொழில், தோல் பொருட்கள், ரசாயன உற்பத்தி என பலதரப்பட்ட தொழில் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்தவகையில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்க திட்டத்திற்கான முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ளன.

2030க்குள் 1 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் பொருளாதாரம் சார்ந்த முன்னெடுப்புகள் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை வகுத்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ), தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (சிப்காட்), தமிழ்நாடு தொழில் முதலீடுக் கழகம் (டிக்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் (டான்சிட்கோ) ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கான கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, டிட்கோ நிறுவனம் பெரும் முதலீடு மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய பெரிய தொழில் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மாநிலத்தில் நிறுவ வழிவகை செய்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக ‘தமிழக சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம் – 2023’ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. சமீபத்தில் இந்த திட்டத்தின் கீழ் சரக்கு போக்குவரத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அந்ததுறை சார்ந்த 31 தனியார் கூட்டமைப்பினர் அடங்கிய லாஜிஸ்டிக் கவுன்சில் ஒன்றை அமைக்கும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் லாஜிஸ்டிக் தொழில் துறையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், தமிழ்நாடு தொழில் முதலீடுக் கழகம் (டிக்), கடந்த 1949ல் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும் ஏற்ெகனவே இயங்கிவரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது. இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடைய ஆர்.கே.சண்முகம் இந்த முதலீட்டு கழகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மொத்த நிதியில் 40 சதவீதம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வரும் இந்த கழகம், இது வரை 1.27 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு நிதி உதவி வழங்கியுள்ளது. இதில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையை பொறுத்தவரை வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழில் வளர்ச்சி நிறுவனம், செய்தித்தாள் காகித நிறுவனம், சிமென்ட்ஸ் நிறுவனம், உப்பு நிறுவனம் என செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவியை வழங்கி வருகிறது. மேலும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களுக்கும் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு நிலம் வாங்க, தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கி பொருத்துவதற்கும், தொழிலுக்கு தேவையான நடைமுறை மூலதனம் பெறுவதற்கும் நிதித் தேவைகளை இந்த டிக் நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது.

இதுமட்டுமின்றி, சிப்காட், டான்சிட்கோ போன்ற நிறுவனங்களும் தமிழகத்தில் தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய அரணாக திகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் தான் நடப்பு 2023-24க்கான மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.28.3 லட்சம் கோடி (34,282 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்டு வளர்ச்சி விகிதம் 11.66 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், பொருளாதாரத்தை மையப்படுத்தி இயங்கக்கூடிய எல்காட் சார்பில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறையின் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் மூலதன வருவாயை அதிகம் ஈட்டி வருகின்றன. இதனிடையே வரும் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாடு மூலமாக மாநிலத்தின் பொருளாதரம் அதிகரிப்பது மட்டுமின்றி, ஏராளமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ள டாப் 10 மாநிலங்கள்
மாநிலங்கள் ஜிஎஸ்டிபி (மதிப்பு லட்சம் கோடி ரூபாயில்)
மகாராஷ்டிரா 38.79
தமிழ்நாடு 28.3
குஜராத் 25.62
கர்நாடகா 25
உத்தரபிரதேசம் 24.39
மேற்குவங்கம் 17.19
ராஜஸ்தான் 15.7
ஆந்திரா 14.49
தெலங்கானா 14
மத்திய பிரதேசம் 13.87

* 37,220 தொழிற்சாலைகள்
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு 37,220 தொழிற்சாலைகள் உள்ளன. அதன்படி தொழிலாளர்கள் எண்ணிக்கையிலும் கணிசமான உயர்வை தமிழகம் கொண்டுள்ளது.

8 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
மாவட்டம் இடம்
சென்னை சோழிங்கநல்லூர்
கோவை விலாங்குறிச்சி
மதுரை இலந்தைகுளம்
மற்றும் வடபழஞ்சி
திருச்சி நவல்பட்டு
நெல்லை கங்கைகொண்டான்
சேலம் ஜாகீரம்மாபாளையம்
ஓசூர் விஸ்வநாதபுரம்

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது