கடலூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா; சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது.  இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தின்பண்ட கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், ராட்டினங்கள், குறிப்பாக ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே விற்கப்படும் சுருளிக்கிழங்கு கடைகளும் வைக்கப்பட்டிருந்தன.

வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமிகள், அலங்கரிக்கப்பட்டு, வாகனங்களில் மேளதாளம் முழங்க கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு ஆற்றில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது இதில், கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர். இதே போல கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடலூர் பாடலீஸ்வரர் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த திருவிழாவில் மட்டுமே  கிடைக்கும் சுருளி கிழங்கினை, ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!