கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு

கடலூர்: கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி, இவரை இவரது பாட்டி நெய்வேலி அருகே உள்ள அரங்கமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் மகன் ரவிசங்கர் (33) என்பவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதன்பின்னர் அந்த சிறுமியின் பாட்டி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இதை பயன்படுத்தி ரவிசங்கர் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் ரவிசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் ரவிசங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதிரத்தினம் ஆஜராகி வாதாடினார்.

Related posts

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் தேதி அறிவிப்பு

திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கூடுதல் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

ஊட்டி தாவரவியல் பூங்கா வளைவுகளில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்