வெளுத்துக்கட்டும் வெள்ளரி சாகுபடி!

குத்தகை நிலம், குறைவான நீர்வளம்… இந்தச் சூழலில் வெறும் 80 சென்ட் பரப்பில் சாகுபடி செய்து ரூ.1 லட்சத்திற்கு மேல் லாபம் பார்க்கிறார் தெய்வாத்தாள். இதற்காக இவர் தேர்ந்தெடுத்திருப்பது வெள்ளரி சாகுபடியை. பலரும் வெள்ளரியை சாகுபடி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை வந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். ஆனால் இந்த 62 வயது தெய்வாத்தாள், தான் விளைவித்த வெள்ளரியை சாலையோரம் குவித்து பொதுமக்களிடம் நேரடியாக விற்றுவிடுகிறார். இதனால்தான் இவர் எப்போதும் கூடுதல் லாபம் பார்ப்பவராகவும் விளங்குகிறார். இவர் பிறந்து வளர்ந்தது பொள்ளாச்சி வட்டாரத்தைச் சேர்ந்த வேறு வேறு கிராமங்கள். இப்போது பயிர்த்தொழில் செய்வது வேறு ஒரு கிராமம். இதில் கூட ஒரு சுவாரஸ்யமான கதையை வைத்திருக்கிறார்.

“பொள்ளாச்சி பக்கத்துல இருக்குற பாப்பனூத்துதான் எங்க சொந்த ஊரு. அங்க எங்களுக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. தண்ணி கம்மியாதான் இருக்கும். அதிலும் நாங்க ஏதாவது பயிர் செஞ்சிக்கிட்டுதான் இருப்போம். எனக்கு பிரபுன்னு ஒரு மகனும், தனலட்சுமின்னு ஒரு மகளும் இருக்காங்க. மகன் பாப்பனூத்துல போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்காரு. மகள் ரெட்டியார்மடத்துல போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கு. அவங்க ரெண்டு பேருதான் என் உலகம். இந்த விவசாய நிலத்துல வேலை பார்க்குற நேரம் போக அவங்க கூடத்தான் இருப்பேன். ரெண்டு ஊருக்கும் நடுவுல இந்த இடம் இருக்கு. இங்க 80 சென்ட் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் பார்க்குறேன். திருமூர்த்தி அணையில தண்ணி திறந்தாங்கன்னா இங்க தண்ணி வரும். அதை வச்சி ஏதாவது பயிர் பண்ணுவோம். ஆனால் அந்த தண்ணிய முழுசா நம்பி இருக்க முடியாது. இருக்குறத வச்சி ஏதாவது பண்ணணும். அதுக்குத்தான் நான் இப்ப வெள்ளரியை சாகுபடி பண்றேன்’’ என தனது குடும்பம் மற்றும் விவசாயப் பணிகள் குறித்து சுருக்கமாக பேசிய தெய்வாத்தாளிடம், வெள்ளரி சாகுபடி குறித்து விளக்கம் தர முடியுமா? என கேட்டோம். உடனே மளமளவென அடுக்க ஆரம்பித்தார். “இங்க இருக்குற குறைவான தண்ணிய வச்சி கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய்னு ஏதாவது பயிர் பண்ணுவோம்.

இந்த சமயத்துல தண்ணிக்கு ரொம்ப கஷ்டம்ங்குறதால வெள்ளரி நல்லா கை கொடுக்கும். நாங்க மாசி மாசம் முதல் வாரத்துல வெள்ளரி சாகுபடி பண்ண ஆரம்பிப்போம். அந்த சமயத்துல திருமூர்த்தி அணையில தண்ணி திறந்தாங்க. அதை வச்சி சாகுபடியை ஆரம்பிச்சோம். முதல்ல 6 தடவை நல்லா நிலத்தை உழவு ஓட்டி 6 அடிக்கு ஒரு பார் அமைப்போம். அந்த பார் நடுவுல இருக்குற வாய்க்கால்ல 5 அடிக்கு இடைவெளி விட்டு கையால சின்னதா ஒரு குழியெடுத்து அதுல 4, 5 வெள்ளரி விதைகளை ஊன்றுவோம். விதைக்காக குழியெடுக்கும்போது ரொம்ப ஆழமாகவும் எடுக்கக்கூடாது, அதே சமயம் மேலேயும் போடக்கூடாது. நல்ல பதமாக பார்த்து விதைக்கணும். அப்பதான் தண்ணில விதை அடிச்சிட்டுபோகாமலும், விதை ரொம்ப ஆழத்துக்கு போகாமலும் இருக்கும். விதைச்சதுல இருந்து 7 நாள்ல செடிகள் எல்லாம் நல்லா முளைச்சி வரும். 10வது நாள்ல ஒவ்வொரு குழியிலயும் ரெண்டு செடிகளை மட்டுமே விட்டுட்டு மத்த செடிகளைக் களைச்சி எடுத்துடணும். சில விதைகள் முளைச்சி வராதுங்குறதுக்காக 4, 5 விதைகள் போடுறோம். அத்தனை செடிகளும் வளர்ந்தா கொடி நல்லா படராது. காயும் பிடிக்காது. இதனால களைச்சி விடுறது ரொம்ப முக்கியம். களைச்சி விட்ட பிறகு காம்ப்ளக்ஸ் உரத்தை செடிக்கு 50 கிராம் கணக்குல வைப்போம்.

80 சென்ட் நிலம்ங்குறதால இந்த உரத்தை வைக்குறோம். நிலம் அதிகமா இருந்தா பொட்டாஷையும், பாக்டம்பாசையும் கலந்து போடலாம். இதுல ஆரஞ்சு கலர்ல ஒரு பூச்சி வரும். அதை விரட்டி அடிக்க 15வது நாள்ல மோனோ குரோட்டாபாஸ் மருந்தை டேங்குக்கு 50 மிலி என்ற அளவுல கலந்து தெளிப்போம். செடி பெருசான பிறகு பச்சைப்புழு தாக்குதல் இருக்கும். இதுக்கு லேனட் (பவுடர் மருந்து) மருந்தை டேங்குக்கு 20 கிராம், மோனோ குரோட்டாபாஸ் 50 மிலி கலந்து தெளிப்போம். இந்த மருந்து புழுக்களை அழிக்கிறதோட செடிங்க நல்லா தழைஞ்சி வர உதவியா இருக்கும். செடிக்கு தகுந்த மாதிரி தண்ணி பாசனம் செய்வோம். வாய்க்கால்ல இருக்கிற தண்ணிய தேவைக்கு ஏத்த மாதிரி பாசனம் செய்வோம். எப்படி பார்த்தாலும் 5 நாளுக்கு ஒரு பாசனம்னு முறை வச்சி செய்வோம். நிலத்துல ஒரு கிணறு இருக்கு. அதிலயும் இப்ப தண்ணி இல்ல. இதனால லாரி மூலமாக தண்ணிய விலைக்கு வாங்கிட்டு வந்து பாசனம் செய்றோம். ஒவ்வொரு முறைக்கும் 3 லாரி தண்ணி தேவைப்படும். இதுவரைக்கும் 3 முறை இது மாதிரி லாரி மூலமாக தண்ணி பாசனம் செஞ்சிருக்கோம்.

40-45வது நாள்ல செடியில காய்கள் நல்லா காய்ச்சி இருக்கும். பனிக்காலமா இருந்தா 40 நாள்லயே காய்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும். இந்த வெயில் காலத்தில 5 நாள் முன்ன பின்ன ஆகும். காய்ப்பு ஆரம்பிச்ச பிறகு சிஎன் மருந்தை வாங்கிட்டு வந்து செடிக்கு 20 கிராம்னு போடுவோம். இது மறுபடி மறுபடி காய்ப்பு வர தூண்டுகோலா இருக்கும். செடிகளை நல்லா பராமரிச்சா 2 மாசம் கூட தொடர்ந்து பறிப்பு எடுக்கலாம். சராசரியா 50 நாட்கள் வெள்ளரிக்காய்களை பறிச்சி மகசூல் எடுக்கலாம். இதுல மொத்தமா 4 லிருந்து 5 டன் வரை மகசூல் கிடைக்கும். இதுலயும் கோணல், முற்றியது, பழம் என ரகம் ரகமா பிரிக்க வேண்டி இருக்கு. நல்ல சரியான பதத்துல இருக்கும் பிஞ்சுகள் நல்லா விற்பனை ஆகும். நான் பயிர் செய்யுற வெள்ளரில ஒன்னைக்கூட வியாபாரிகளுக்குக் கொடுக்க மாட்டேன். மெயின் ரோட்டை ஒட்டி இந்த நிலம் அமைஞ்சி இருக்குறதால தினமும் பறிக்குற காய்களை ரோட்டு ஓரத்துல வச்சி மக்களுக்கு நேரடியா விக்க ஆரம்பிச்சிடுவோம். இந்த வழியா போற, வரவங்க வாங்கிட்டு போறாங்க. எல்லா காயையும் இப்படியே வித்துடுவேன். பழங்களையும் மக்கள் ஆர்வமா வாங்கிட்டு போறாங்க. இந்த 80 சென்ட் நிலத்துல நல்ல காய்கள்னு பார்த்தா எப்படியும் 3 டன்னுக்கு குறையாம மகசூலா கிடைக்கும். இதை கிலோ 80 லிருந்து 100 ரூபாய்னு நேரடியா வித்துடறோம். சராசரியா 90 ரூபாய்னு வச்சிக்கிட்டா கூட 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதில செலவுன்னு பார்த்தா எப்படியும் ஒரு லட்ச ரூபாய் வந்துடும். அதுபோக மீதி 1 லட்சத்து 27 ரூபாய் லாபமா கிடைக்கும். இதனாலதான் பல வருசமாக இதை விடாம செஞ்சிக்கிட்டு வரேன்’’ என விவரமாக பேசுகிறார் தெய்வாத்தாள்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு