மகத்தான லாபம் தரும் மாத்திரக்காய்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தளரப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவர் மேல்மருவத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறார். அதுவும் துறைத்தலைவராக செயல்படுகிறார். இதற்கிடையே தனது சொந்த ஊரில் 7.5 ஏக்கர் நிலத்தில் நெல், தென்னை, வேர்க்கடலை, மாத்திரக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும் பல பயிர்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறுகிறார். முனைவர் பூபாலனை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்துப் பேசினோம்.“பூர்வீக விவசாயக் குடும்பம் என்பதால் சிறு வயதில் இருந்தே இயல்பாக விவசாயத்தின் மீது நாட்டம் இருந்தது. அப்பா ஆறுமுகத்துடன் விவசாய வேலைக்கு செல்வேன். ஒருபுறம் படிப்பு, மறுபுறம் விவசாயம் என்றுதான் வளர்ந்தேன். இப்போது நானே நேரடியாக விவசாயத்தை கவனித்து வருகிறேன். நான் பணிபுரியும் கல்லூரி 130 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் தினமும் வயலுக்கு சென்று பயிர்களைப் பார்த்து வருகிறேன்.

எங்களுக்கு சொந்தமாக உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை பிரித்து, அதில் 75 சென்டில் கோ- 51, ஏடிடி- 37, மகேந்திரா, ஆர்என்ஆர் போன்ற நெல் வகைகளை பயிர் செய்திருக்கிறேன். இதற்கான விதை நெல் அனைத்தும் ஏற்கனவே நான் சாகுபடி செய்த நெற்பயிரில் இருந்து எடுத்து வைத்ததுதான். எந்த ஒரு பயிரை சாகுபடி செய்வதற்கும் முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்ய வேண்டும். முதலில் சரியான விதை நெல்லை தேர்ந்தெடுக்க வேண்டும். பயிரை கைகளால் அடித்து எடுத்த விதைநெல்லை மட்டும்தான் நான் வழக்கமாக பயன்படுத்துகிறேன். விதைகள் முளைத்து நிலத்தில் நாற்று நடுவதற்காக தயாராகிவிடும். நாற்று நடுவதற்கு முன்பு நிலத்தை இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். பின்னர் எட்டு தட்டு கலப்பை, சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் களை இல்லாமல் நிர்வகிக்கலாம். அதேபோல் சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்ய நிலத்தை நன்கு சமன்படுத்த வேண்டும். மண்ணை சமன்படுத்தும்போதே அடிஉரம் இடுவது அவசியம்.

இவ்வாறு செய்த பின்னரே நிலத்தில் நாற்று நட வேண்டும். நடவு செய்த 18வது நாளில் யூரியா, பயோ பொட்டாசியம் போன்ற உரங்களைத் தெளிப்போம். இதன்மூலம் பயிர்கள் செழிப்பாக வளரத்தொடங்கும். 45 நாட்கள் கழித்து அம்மோனியா சல்பேட், வயாகரா போன்ற உரங்களைத் தூவுவோம். 60வது நாளில் நெற்பயிர் வரும். இந்த நேரத்தில் கதிர் அண்ணபூச்சி வெகுவாக பயிர்களைத் தாக்கும். இதனைக் கட்டுப்படுத்த நாங்கள் மாட்டுக்கோமியம் 5 லிட்டர், இஞ்சி மற்றும் பூண்டு ½ கிலோ, பச்சமிளகாய் ½ கிலோ சேர்த்து அரைத்து பயிர்களில் தெளிப்போம். இதனால் பூச்சிகள் கட்டுக்குள் வரும். கோ-51 ரக நெல் 100 லிருந்து 105 நாட்களிலும், ஏடிடி 37 ரக நெல் 105 லிருந்து 110 வது நாட்களிலும், மகேந்திரா ரக நெல் 120 நாட்களிலும், ஆர்என்ஆர் ரக நெல் 120 நாட்களிலும் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த நெற்பயிர்களை ஆட்களை வைத்து அறுவடை செய்கிறோம். 75 சென்ட் நிலத்தில் விளையும் நெல் மூலம் வருமானம் சுமார் ரூ.57 ஆயிரம் கிடைக்கிறது. இதில் உழவுக்கு ரூ.6000, நடவுக்கு 4000, அடிஉரத்திற்கு ரூ.1500, மேலுரம் ரூ.4000, யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்களுக்கு ரூ.2500, அறுவடை கூலி ரூ.4000 என ரூ.22 ஆயிரம் செலவாகும். அதுபோக ரூ.35 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது” என்று தொடர்ந்து பேசிய அவர்…

‘‘அதேபோல் சுமார் 25 நாட்களில் விளைந்து நல்ல லாபம் தரக்கூடிய மாத்திரக்காயையும் எங்களது நிலத்தில் பயிர் செய்துள்ளேன். மாத்திரக்காய் என்பது வெள்ளரிக்காயில் ஒரு வகை ஆகும். ஆனால் இது உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். மாத்திரக்காய் பொதுவாகவே ஊறுகாய்க்கு பயன்படுத்தும் பயிர் வகைகளில் ஒன்று. இதை குளிர் பிரதேசங்களான பெங்களூரு, சிம்லா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வெகுவாக பயன்படுத்துகின்றனர். இந்த பயிருக்கான விதைகளை எனது நண்பர் மூலம் வாங்கி பயிர் செய்கிறேன். 25 நாட்களில் செடிகள் வளர்ந்து காய் காய்க்க ஆரம்பிக்கும். இரண்டு நாளைக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 34 நாளைக்கு ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டும். செடிகள் வளரத் தொடங்கியதும் பந்தல் அமைக்க வேண்டும். பிறகு இதனை பந்தல் மீது கொடிபோல படரவிட வேண்டும். பந்தல் அமைத்து வளர்ப்பதன் மூலம் காய்கள் சேதமடையாது. செடி வைத்த 25 நாளிலிருந்தே அறுவடை செய்ய ஆரம்பித்துவிடுவோம்.

மாத்திரக்காய்களை எங்கும் அலைந்து திரிந்து நாங்கள் விற்பனை செய்வது கிடையாது. வியாபாரிகள் வீடு தேடி வந்து அறுவடை செய்த காய்களை வாங்கிக்கொள்கிறார்கள். காய்களுக்குரிய பணத்தை மொத்தமாக செட்டில் செய்துவிடுகிறார்கள். இதனால் விற்பனையில் எந்த பிரச்னையும் இல்லை. என்னை சார்ந்தவர்களுக்கும் இந்த பயிரை நடவு செய்யச்சொல்லி வருகிறேன். மாத்திரக்காயில் அதிக லாபம் கிடைப்பதால் சுமார் 75 சென்டில் பயிர் செய்கிறோம். இந்த வகை காயில் பெரிய மெனக்கெடல் கிடையாது. காய் பறிப்பது, சரியான நேரத்தில் உரமிடுவது, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் தெளிப்பது மட்டும்தான் வேலை. இதில் ரூ.60 ஆயிரம் செலவு போக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை லாபமாக கிடைக்கிறது. இதன் ஆயுட்காலம் 70 நாட்கள்தான். அறுவடை முடிந்தவுடன் மாற்றுப்பயிரை சாகுபடி செய்கிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கிறது.

தற்போது 3 ஏக்கரில் மானாவாரி பயிரான வேர்க்கடலையை பயிர் செய்துள்ளோம். வேர்க்கடலையைப் பொருத்தவரையில் அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய பக்குவம் கொண்டது. விதையை போடுவதற்கு முன்பு மண்ணில் கட்டிகள் இல்லாமலும், இறுக்கம் இல்லாமலும் தயார் செய்துகொள்வோம். பிறகு 4வது உழவின்போது ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இடுவோம். மண்ணின் பக்குவத்தை பார்த்துவிட்டு கடைசி உழவின்போது 200 கிலோ ஜிப்சம் இடுவோம். இதனையடுத்து ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 30 செமீ இடைவெளியும், ஒரு வரிசையில் ஒவ்வொரு செடிக்கும் இடையில் 10 செமீ இடைவெளியும் விட்டு நடவு செய்வோம். இதனால் அதிகமான வேர்க்கடலைகள் கிடைப்பதோடு, தரமான பருப்பாகவும் இருக்கும். பின்னர் 10 நாட்களுக்கு ஒருமுறை சீரான வகையில் தண்ணீர் விடுவோம். வேர்க்கடலைக்கு அதிக பராமரிப்பு தேவைப்படாது. வேர்க்கடலை பயிரிடப்படும் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். கடந்த முறை பயிர் செய்திருந்தபோது ஒரு சென்ட் நிலத்தில் இருந்த செடியில் கடலையே இல்லை. பிறகு அருகில் இருந்த எலிப்பொந்தினை தோண்டி பார்த்தபோது அனைத்து பருப்பும் அங்குதான் இருந்தது. எனக்கு எலிகளைக் கொல்வதைவிட அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் இயற்கை முறையில் விளைந்த புதினாவை கரைத்து வயல்களின் வரப்பில் தெளித்தேன். இதன் மணத்திற்கு எலிகள் அனைத்தும் ஓடிவிட்டன.

பயிரில் களை எடுக்கும்போது செடிக்கு மண் அணைப்போம். இலை பழுத்தால் செடி அறுவடைக்கு வந்ததை அறிந்துகொள்ளலாம். அந்த சமயத்தில் அறுவடை செய்வோம். கடலை எண்ணெய்க்காக ஒரு பகுதி நிலக்கடலையும் வைத்துகொண்டு, மற்றவற்றை வியாபாரிகளுக்கு விற்றுவிடுவோம். நாங்கள் பெரும்பாலும் கடலையை உடைத்து எடுத்து பயிராக விற்பனை செய்வோம். ஒரு மூட்டை நிலக்கடலை பயிர் ரூ.8 ஆயிரத்திற்கு விற்கும். மொத்தமாக 3 ஏக்கர் நிலத்தில் 20 மூட்டை மகசூல் கிடைக்கும். இதன்மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். இதில் ரூ.41 ஆயிரம் செலவாகும். அதுபோக ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இது போக ஒரு ஏக்கரில் தென்னை மரமும் வளர்த்து வருகிறோம். இதிலிருந்து எடுக்கப்படும் தேங்காய்களை மதிப்புக்கூட்டி எண்ணெயாக விற்பனை செய்கிறோம். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை 200 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதன்மூலம் மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வரையில் லாபம் கிடைக்கிறது. மேலும் எங்கள் வீட்டிற்கு தேவையான எள், கேழ்வரகு போன்றவற்றையும் பயிரிட்டு வளர்த்து வருகிறேன் ’’ என்கிறார் முனைவர் பூபாலன்.
தொடர்புக்கு: முனைவர் பூபாலன் – 95008 56935

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி