கிரிப்டோ பிரச்னைகளில் உடனடி கவனம் தேவை: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

வாஷிங்டன்: கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி கவனம் தேவை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நேற்று முன்தினம் நடந்த ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் உலக வங்கி கவர்னர்கள் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக கிரிப்டோ சொத்துக்களின் தாக்கங்கள் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்திலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘கிரிப்டோ கரன்சி சிக்கல் விவகாரம் ஜி20 நாடுகளிடையே முக்கிய விவாதப் பொருளாக வெளிவந்துள்ளது.

இந்த துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அவசரம் குறித்து உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் முக்கிய கூறுகளை வெளிக்கொணர்வதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி ஸ்திரதன்மை வாரியம் ஆகியற்றின் பணியை ஜி20 அங்கீகரிக்கிறது. வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்கள் உட்பட முழு அளவிலான அபாயங்களை கருத்தில் கொண்டு கிரிப்டோ சொத்துக்கள் மீதான எந்தஒரு புதிய விதிமுறைகளும் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்’ என்றார்.

2022-2023ல் 7 சதவீத வளர்ச்சி
சர்வதேச நாணய மற்றும் நிதி குழுவின் கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘2022-2023ம் ஆண்டின் பொருளாதார ஆய்வின்படி இந்தியாவின் பொருளாதாரம் 2022-2023ம் ஆண்டில் 7 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதாரத்தை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

Related posts

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!