CRY அமைப்பின் மாதவிடாய் பிரச்சாரம்!

நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு நிகழும் மாதவிடாய் எனும் இயற்கையான விஷயம் இன்றும் மூட நம்பிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது. காரணம், இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாததாலும் மேலும் சமூகம் அதை பேசக்கூடாத ஒரு விஷயமாகவே பாவித்து வருகிறது. நகரங்களிலும், கிராமத்தில் சில பகுத்தறிவு மிகுந்த குடும்பங்களிலும் மாதவிடாய் குறித்த மனப்பான்மை மாறி வந்தாலும், இன்றும் பெண் பிள்ளைகளுக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்படும் போது, தங்களுக்கு ஏதோ நோய் வந்துவிட்டதாக பயந்து விடுகிறார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீட்டிலிருப்பவர்கள் அதை கண்டுபிடிக்கும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது. பெண் குழந்தைகள் பக்குவம் அடைந்ததும், மாதவிடாய் குறித்த தகவல்களை அவர்களிடம் வெளிப்படையாக பேச அம்மாக்களே தயங்குவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பல பெண்கள் மாதவிடாய் ஏற்பட்ட பிறகும், எதற்காக தங்களுக்குள் இந்த மாற்றம் நிகழ்கிறது என்று புரியாமலேயே ஒவ்வொரு மாதமும் நேப்கினை மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டு அதை கடைபிடிக்கிறார்கள். பெண் குழந்தைகள் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை வெளியிலும் பேச முடியாமல் வீட்டிலும் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை மாற வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் காலத்தை நாம் உருவாக்கி கொடுப்பதன் மூலம், அது அவர்கள் கல்வியையும் பிற பொழுதுப்போக்கையும் தொடர ஆதரவாய் இருக்கும் எனும் பிரச்சாரத்தை CRY (Child Rights and You – `குழந்தை உரிமைகளும் நீங்களும்’) அமைப்பு முன்னெடுத்துள்ளனர். சமீபத்தில் பீகாரில் யுனிசெஃப் அமைப்புடன் சேர்ந்து பெண்களின் மேம்பாட்டிற்காக நடத்தப்பட்ட ஒரு பயிற்சிப்பட்டறையிலேயே, கல்லூரி மாணவி ஒருவர், சானிட்டரி நேப்கின்களை அரசு இலவசமாக அளிக்குமா என்று கேட்டதற்கு, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அடுத்து இலவசமாக உடைகள், ஷூக்கள் கேட்பீர்கள். அதற்கு அடுத்து ஆணுறைகளை கூட இலவசமாக கேட்பீர்களா என்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களின் மேம்பாட்டிற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியிலேயே பெண்ணாக மாதவிடாயின் அனைத்து தாக்கத்தையும் நன்கு உணர்ந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே இது போல பொறுப்பில்லாமல் பதிலளித்தது ஊடகங்களில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது.இதற்கு அவர் பின்பு அந்த மாணவியிடமும் மக்களிடமும் மன்னிப்பு கோரி இருந்தாலும், பல இடங்களில் நன்கு படித்த அதிகாரிகளே பெண்களுக்கு சானிட்டரி நேப்கின் ஒரு அடிப்படை தேவை என்பதை மறந்து செயல்படுகின்றனர். தென்னிந்தியாவில் CRY அமைப்பு, மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் பற்றிய NFHS-5 தரவுகளை பகுப்பாய்வு செய்து, அதில் அதிகப்படியான பள்ளிப்படிப்பை கொண்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது தெரிய வந்துள்ளது. மேலும், ரத்த சோகை உள்ள பெண்களும், குழந்தை திருமணம் செய்யப்பட்ட பெண்களும் தங்கள் மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பான சுகாதார முறையை பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் பெண்களின் அன்றாட வேலைகளை மட்டும் பாதிக்காமல் அவர்கள் வாழ்க்கையின் பாதையே மாற்றக் கூடியது. சரியான கழிப்பறை வசதிகள், மாதவிடாய் பொருட்கள் கிடைப்பதற்கான வசதிகள் இல்லாமல் போகும் போது பெண் குழந்தைகள் மாதம் இரண்டு முதல் நான்கு நாட்கள் வரைக் கூட பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலி அல்லது அசெளகரியமும் அவர்களை பள்ளிக்கு சரியாக போக முடியாமல் தடுக்கிறது. மாதவிடாயை பேசக் கூடாத பொருளாக பாவிப்பதால், அதை பலர் பெண்களுக்கு எதிராக  அவர்களை தாக்க பயன்படுத்துகின்றனர். ஆனால் பெண்களோ அதை  எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் கூச்சப்பட்டு பல அவமானங்கள் கேலி-கிண்டல்களுடன் ஒடுக்குமுறையையும் சந்திக்கின்றனர். சில கிராமங்களில் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்த சுகாதாரமான பொருட்கள் கிடைக்காமல் இன்றும் துணிகளையே உபயோகிக்கிறார்கள். அதனை சரியாக சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்துவதால் அவர்கள் பல நோய் தொற்றுக்கும் உள்ளாகின்றனர்.வலி, அசெளகரியம் மற்றும் கறை படியும் என்ற பயத்தால் பெண்களும் படிக்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் மாதவிடாய் நாட்களில் வேலையிலும் படிப்பிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் அவர்களது பங்கேற்பு பாதிக்கப்படுகிறது. மாதவிடாய் நாட்களில் வேலைக்குச் செல்ல முடியாமல் பெண்கள் விடுப்பு எடுப்பதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். CRY நிறுவனம் தங்கள் பிரச்சாரத்தை 10 முதல் 17 வயதிலான வளர் இளம் பெண் குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்கின்றனர். அவர்களை தொடர்ந்து ஆண் குழந்தைகளையும் இந்த பிரச்சாரத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதன் மூலம் ஆண்களும் பெண்களை கண்ணியமான கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்கள் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருப்பார்கள். அடுத்ததாக கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள் – அதிகாரிகள், பெற்றோர்கள் என அந்த பெண்ணை சுற்றி இருக்கும் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்த பிரச்சாரம் வெறும் சுகாதாரம் சார்ந்து மட்டும் இல்லாமல் பெண்கள் சந்திக்கும் உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளையும் கூட அந்த துறை சார்ந்த அறிஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமே இது குறித்து ஆர்வலர்கள் மட்டும் பேசினால் போதாது. இதற்கான புரிதல் பல தரப்பட்ட மக்களிடம் சென்றடைந்து, அவர்கள் இதைப் பற்றி பலரிடம் பேச வேண்டும் என்பது தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமும் மாதவிடாய் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் ஒரு சமூகமாக சேர்ந்து நாம் முன்னேற முடியும் என்கிறார் CRY நிறுவனத்தின் தென்னிந்திய பகுதியின் வளர்ச்சி திட்ட துறையின் இணை பொது மேலாளர் ஹாரி ஜெயகரன்.  விளையாட்டில் ஆர்வமுள்ள பெண் குழந்தைகளும், குறிப்பிட்ட வயதுக்கு மேல், விளையாடுவதை நிறுத்திக் கொள்கின்றனர். அல்லது விளையாட்டில் அவர்களுடைய பங்கேற்பு பாதிக்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணமும் மாதவிடாயாகவே இருக்கிறது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் மாதவிடாய்க்கு பின், விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதை நிறுத்திக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் பெண்களுக்கு சுகாதாரமான கழிவறைகள், இலவச சானிட்டரி நேப்கின்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவத்தையும் முன்னெடுக்க உள்ளனர்.சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அரசுப் பள்ளி-கல்லூரி மாணவிகள் உட்பட தனியார் பள்ளி -கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு மாதவிடாய் காலத்தில், விளையாட்டுகளில் பங்கேற்கும் மாணவிகள் எதிர்கொள்ளும் இடர்களை வெல்வது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. CRY அமைப்பு, இந்திய அளவில் 19 மாநிலங்களில் 102 நிறுவனங்களுடன் குழந்தைகளின் கல்வி, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் மற்றும் அவர்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்படங்கள்: ஜி.சிவக்குமார்

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!