விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ரூ.9.95 லட்சம் பயிர்க்கடன்: கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 16 பேருக்கு ரூ.9.95 லட்சம் பயிர்க்கடன்களை கலெக்டர் வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பான அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இந்த கூட்டத்தில், கூட்டுறவு துறை சார்பில், 16 விவசாய பயனாளிகளுக்கு ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 2 விவசாய பயனாளிகளுக்கு பழச்செடிகளின் தொகுப்பு, 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பிலான தென்னங்கன்று மற்றும் வேளாண் இடு பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

கூட்ட வளாகத்தில் டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல்முறையை கலெக்டர் பார்வையிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுரேஷ், மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி

கரீபியன் லீக் டி20 தொடர்: பார்படாஸை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது கயானா