பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிர் உரங்கள்!

பயிர்களுக்கு உயிர் உரங்கள் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. ஒவ்வொரு உயிர் உரமும் பல்வேறு வகைகளில் செயல்பட்டு பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதுகுறித்து விளக்குகிறார் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சு.வெங்கடாசலம்.உயிர் உரங்கள் தழைச்சத்தைக் கிரகித்து வேர்முடிச்சில் பொருத்தியும், மணிச்சத்தைக் கரைத்தும் இயற்கை முறைகள் மூலம் பயிர்களுக்கு கொடுக்கின்றன. ரசாயன உரங்களின் பயன்பாட்டை உயிர் உரங்கள் குறைக்குமென்பதும் நிதர்சனமான உண்மை. உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணில் ஊட்டச்சத்து சுழற்சியை மீட்டு கரிமப்பொருட்களை அதிகரிக்கும். தழைச்சத்தினை நிலைநிறுத்தும் திறன் கொண்ட ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பேசில்லஸ், சூடோமோனாஸ், அசிடோபெட்டர், அசோலா ஆகியவை மணிச்சத்தை கரைத்துக் கொடுக்கும் வல்லமை உடையவை. பூஞ்சான வகையான வேம் பயிர்களுடைய வேரின் உட்பூசணமாக இருந்துகொண்டு வேர் புகமுடியாத இடத்திற்குச் சென்று மணிச்சத்தினைக் கரைத்து பயிர்களுக்கு கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த முறையில் பயிர் உற்பத்திக்கு நுண்ணுயிர் உரங்கள் பயன்படுவதுடன், மண்ணின் வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கின்றன. நுண்ணுயிர் உரங்கள் பயன்படுத்தும்போது 30 சதவீதம் தழைச்சத்தும், 20 சதவீதம் மணிச்சத்தும் கிடைப்பதால் இடுபொருட்களின் செலவும் கனிசமாக குறைகிறது. மேலும் சில நுண்ணுயிர்கள் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இன்டோல் அசிடிக் அமிலம், ஜிப்ரலிக் அமிலம், கரிம அமிலம், ஃபொர்மலிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து பயிரின் இலைகள், தூர் மற்றும் வேரின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

ரைசோபியம்

இந்த வகை பாக்டீரியா பயறு வகை, நிலக்கடலை பயிர்களுக்கு கொடுப்பதன்டன் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர்முடிச்சில் தக்கவைத்து 20 சதவீதம் மகசூலை அதிகரிப்பதுடன் முடிச்சுகளில் சுரக்கும் திரம் மண்ணை வளப்படுத்துகிறது.

அசோஸ்பைரில்லம்

மண்ணில் வாழும் இந்த நுண்ணுயிரி காற்றில் உள்ள தழைச்சத்தை ஈர்த்து, நிலைநிறுத்தி இணைகூட்டு வாழ்முறையில் நெற்பயிரின் வேர் மற்றும் வேர் சூழ் மண்டலத்தில் செயல்படுகிறது. இது பயிரோடு சேர்ந்து தழைச்சத்தை நிலைநிறுத்தும் தன்மை கொண்டது. நெற்பயிர் ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்யும் மாவுச்சத்தினை அசோஸ்பைரில்லம் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகக் காற்றில் உள்ள தழைச்சத்தினைப் பிடித்து நெற்பயிருக்குக் கொடுக்கிறது. பயிரின் வேர் வளர்ச்சியையும், மகசூலையும் அதிகரிப்பதுடன் வறட்சியைத் தாங்கும் திறனையும் கொடுக்கிறது. நெல், சோளம், கம்பு, வாழை, காய்கறி பயிர்களுக்கும் 25 சதவீதம் மகசூலை அதிகரிக்கிறது.

பாஸ்போ பாக்டீரியா

தாவரங்களின் திசுக்கள், வேர்கள் செழித்து வளரவும் பயிர்களின் இனப்பெருக்கத்திற்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தினை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரானது பயிருக்கு கிட்டா நிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள மணிச்சத்தினையும், அங்கக அமில திரவங்களையும் சுரந்து அவற்றில் கரைய வைத்து பயிருக்கு எளிதாக கிடைக்கும் நிலைக்கு மாற்றுகிறது. பாஸ்போ பாக்டீரியா இடுவதன் மூலம் மலர்களின் எண்ணிக்கையும், விதை பெருக்கத்தையும் அதிகரிக்கிறது. அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் போன்ற தழைச்சத்து அளிக்கக்கூடிய உயிர் உரங்களுடன் பாஸ்போ பாக்டீரியாவைக் கலந்து இடும்போது தழைச்சத்தினை அதிக அளவில் ஈர்க்கும் பணியில் பயிர்களுக்கு உதவி புரிகின்றன.

வேம்

பயிர்களுக்குத் தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்தை மண்ணில் இருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனம்தான் வேம். காய்கறிப் பயிர்கள், பழ வகைகள், மரக்கன்றுகள், தென்னை, மலைத்தோட்டப் பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். வேர் உட்பூசனமானது கரையாத நிலையில் உள்ள நுண்ணூட்டச் சத்து மற்றும் மணிச்சத்தைப் பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும். வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரைப் பாதுகாக்கும். வேர்களுக்கு மண்ணில் இருந்து நீரை எடுத்துக்கொடுக்கும். இதன்மூலம் 10 முதல் 15 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

பயன்படுத்தும் முறை

ஒரு எக்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் உரங்களை நன்கு மக்கிய தொழு உரத்துடனும், விதைகளை ஆறிய அரிசி கஞ்சியுடனும் கலந்து இடலாம்.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய உணவு எண்ணெய் வித்துகள் திட்டங்களின் கீழ் பயறு வகை, எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா ஆகியவை வேளாண் துறை மூலம் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க சிறுதானியப் பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம். உழவர் செயலியின் மூலமாக உயிர் உரங்களின் இருப்பு நிலை மற்றும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை