தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் ஸ்மிருதி இரானியை இழிவாக விமர்சனம் செய்ய கூடாது: ராகுல்காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: அமேதி மக்களவை தொகுதியில் 2019ம் ஆண்டு ராகுல்காந்தியை தோற்கடித்தவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரிலால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார். டெல்லி லுட்யென்ஸில் உள்ள ஒன்றிய அமைச்சருக்கான அரசுபங்களாவில் வசித்து வந்த ஸ்மிருதி இரானி அந்த பங்களாவை இந்த வார தொடக்கத்தில் காலி செய்தார்.

மோடி தொடர்பான விமர்சன வழக்கில் எம்பி பதவி பறிக்கப்பட்ட போது ராகுல்காந்தியின் பங்களாவை அவசரகதியில் காலி செய்ய வைத்த விவகாரம் உள்பட ஸ்மிருதி இரானி மீது கடும் அதிருப்தியில் இருந்தவர்கள் தற்போது அவரை விமர்சனம் செய்தனர். இதை ராகுல்காந்தி கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் நடக்கும். எனவே அந்த விஷயத்தில் ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவரையும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம். அது வலிமை அல்ல என்று குறிப்பிட்டு ள்ளார்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு