மாநில பாடத்திட்டம் குறித்த விமர்சனம் ஆளுநர் ரவி பேச்சுக்கு கடும் கண்டனம்: பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு அறிக்கை

சென்னை: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பள்ளி விழா ஒன்றில் பேசும்போது, ‘தமிழ்நாடு பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது’, என்று பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு அவர் வகிக்கும் பொறுப்புக்கு மிகவும் கண்ணியக்குறைவானது. என்சிஇஆர்டி தயாரித்த இயற்பியல் பாடப் புத்தகம் அணு குறித்து கடந்த 2017ம் ஆண்டில் ஒரு விதமாகவும், 2020க்கு பின்னர் வேறுவிதமாகவும் உள்ளதாக தேசிய தேர்வு முகமை, உச்ச நீதிமன்ற நீட் வழக்கில் தெரிவித்துள்ளது. வேறு வழியில்லாமல் இரண்டு வகையான விடைகளை மாணவர்கள் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் இரண்டு விதமான பதில்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேர்வு முகமை அந்த வழக்கில் தெரிவித்தது. இவ்வளவுதான் என்சிஇஆர்டி மற்றும் தேசிய முகமை ஆகியவற்றின் தரமும், தகுதியும்.

மாநில பாடத்திட்டம் தரமற்றது என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆகியவை ஆழமாக ஆய்வுசெய்து விவாதித்து, தனது தீர்ப்பில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரமற்றது என்ற வாதத்தை நிராகரித்து, மாநில பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. எந்த வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர் கொள்ளும் உள்ளடக்கம் கொண்டதாக பாடநூல்கள் மாநில அரசால் தயாரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மாணவர்கள் இடையே ஆளுநர் பேசியுள்ளது, அடிப்படை ஆய்வு இல்லாத, அவதூறு பரப்பும் உரையாகும். மன ரீதியாகவும், அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்பு அடையும் வகையில் பேசப்பட்ட பேச்சு கண்டனத்துக்குரியது. அதனால் மாநில பாடத்திட்டம் குறித்து அவர் ெதரிவித்த கூற்றை அவர் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு