அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது குற்ற வழக்குப்பதிந்து அகற்றவேண்டும் பெங்களூரு, சென்னை போல மதுரையும் மாறி விடக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: ‘அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது குற்ற வழக்கு பதிவதுடன், அகற்றும் நடவடிக்கையை மேற்ெகாள்ள வேண்டும். பெங்களூரு, சென்னை போல மதுரையும் மாறி விடக்கூடாது’ என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாகமலை மேற்கு பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் மதன் குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை வடக்கு தாலுகா விளாங்குடியில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர். எனவே, சட்டவிரோத கட்டுமானத்தை இடித்து அகற்றவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ‘‘மனு தாக்கலாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், மதுரை மாநகராட்சி கமிஷனர் தரப்பில் இதுவரை பதில்மனுவோ, அறிக்கையோ எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, மதுரை மாநகராட்சி ஆணையர் ஆஜராகி, விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வீ.லட்சுமி நாராயணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆஜரானார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நோட்டீஸ் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலர் சிவில் வழக்குகளில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாநகராட்சி தரப்பில் தேவையான மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘அனுமதியற்ற கட்டுமானங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வதில்லை. அனுமதியற்ற கட்டுமானங்கள் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சட்டவிரோத கட்டுமானங்களால் தான் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்கள் பாழாகிவிட்டன. அந்த நிலைக்கு மதுரையும் மாறுவது வேதனையளிக்கிறது. சென்னையின் நிலையைப் போல மதுரையும் மாறிவிடக்கூடாது. அனுமதியற்ற கட்டுமானங்கள் மீது உரிய குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். அப்போது தான் ஏழைகளையும், விதிகளை பின்பற்றுவோரையும் பாதுகாக்க முடியும். அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு விவகாரங்களில் உள்ளாட்சி அமைப்புகளும், காவல்துறையும் இணைந்து செயல்பட்டால் தான் பலன் கிடைக்கும். அபராதம் விதிப்பதோடு நின்றுவிடாமல், அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களால் மக்கள் நிம்மதியின்றி வாழும் நிலை உள்ளது. இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியாது. நீதிமன்றம் தலையிட வேண்டியது அவசியம். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, காவல்துறை துணையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் தரப்பில் சுற்றறிக்கை கொடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்னை தொடர்பான கோரிக்கை மனுக்களின் மீது உரிய வாய்ப்பளித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்