மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்

சென்னை: மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் – மாநில சுயாட்சிக்கும் – மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது.

இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக” மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான – ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில், தி.மு.க.சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தலைமையில் நாளை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் “மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்” நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் – கழக வழக்கறிஞர்கள் மற்றும் கழக முன்னணியினர் – தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பாசிச ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு