Sunday, September 29, 2024
Home » குற்றம் குற்றமே..!

குற்றம் குற்றமே..!

by Neethimaan


இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே கிடையாது. அனைத்து விஷயங்களும் அதில் இருக்கிறது என்பது ஒரு பக்கம் என்றால் நமக்கு பயனளிக்கும் விஷயத்தை மட்டும் தேடி பார்ப்பது என்பது ஒருவகை கட்டுப்பாடு. ஆனால் இந்த கட்டுப்பாடு எல்ேலாருக்கும் வந்துவிடாது. மற்றவர்கள் தூண்டுதல் இருந்தால் அது விரைவில் அறுந்துவிடும். அப்படித்தான் வளர் பருவ தலைமுறையினர் செல்போனில் வயதுக்கோளாறு காரணங்களால் பார்க்க கூடாத விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தற்போது முகநூலில் நாம் வேண்டாம் என்று ஒதுக்கினாலும் முன்னாள் வந்து ஆபாச வீடியோக்கள் மின்னுகின்றன. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் கவன சிதறல்களால் வழிதவறி விடுகின்றனர். இளம்வயதில் ஒருவர் மனதில் பதியும் விஷயங்கள் பசுமரத்தாணி போல் பதிவாகிவிடும்.

அப்படித்தான் செல்போனில் வலம் வரும் ஆபாச வீடியோக்களை எதேச்சையாக பார்க்கும் இளைஞர்கள் கொஞ்சம், கொஞ்சமாக அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதன்பிறகு அவர்களது கலகலப்பு, உற்சாகம், கள்ளம்கபடமில்லாத மகிழ்ச்சி அனைத்தும் மறைந்துபோய்விடுகிறது. நான்கு சுவர்களின் மத்தியில் பித்து பிடித்தவன் போல் பெரிய மனச்சுமையுடன் உட்கார்ந்திருக்கிறான். யார் மீதும் கோபம் வருகிறது. இதை மறக்க சிகரெட், மது, போதை என்று இறங்குகிறான். பின்னர் அது தரும் தைரியத்தில் பெண்களிடம் தவறாக நடக்க துணிகிறான். இப்படியாக சமூகத்தின் முன்பு குற்றவாளியாக தலைகுனிந்து நிற்கிறான். அவனது இந்நிலைக்கு யார் மீது குற்றம் சொல்வது.

சிறுவர்களும், இளைஞர்களும் வழக்கமான தங்கள் நடத்தையில் இருந்து மாறுபடும்போதே பெற்றோர்கள் அவர்களை கவனித்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் அல்லது ஆலோசனை மையங்களுக்கு அழைத்து சென்று அவனை நல்வழிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் வீடியோவை பதிவிறக்கம் செய்வதும், செல்போனில் வைத்திருப்பதும், பார்ப்பதும் குற்றம் என்று சட்டம் ெசால்கிறது.  ஒருவர் இதை தனியாக பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு பகிர்வது தான் குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அது எப்படி சாத்தியம்.

சமூகத்தில் மட்டுமல்ல திரைப்படங்களில் கூட எதிர்மறையான விஷயங்கள் தான் மனதில் விரைவில் பதிந்துவிடுகிறது. அப்படி இருக்கும் போது செல்போனில் ஆபாசபடங்களை ஒருவன் தொடர்ந்து பார்த்துவந்தால் அவன் மனம் வக்கிரம் அடையாது என்று உறுதிப்பட கூற முடியுமா? எனவே உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்தது. இணையதளத்தில் ஆபாச வீடியோக்கள் என்னதான் தடை செய்யப்பட்டாலும் ஏதோ ஒரு வகையில் அது மறைமுகமாகவோ, வேறுவடிவில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக நலன் கருதி சமூக ஊடகங்களுக்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது.

தனி மனித ஒழுக்கத்தை மீற வைத்து ஒருவனை சமூகத்தில் குற்றவாளியாக மாற்றும் சிறார்கள் பாலியல் சுரண்டல் வீடியோ மட்டுமல்ல பொதுவாகவே ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் குற்றமே. இந்த சமூகம் சிறுவர்களை நல்ல சிறுவர்களாகவும், இளைஞர்களை சமூகத்தின் தூண்களாகவுமே பார்க்க விரும்புகிறது. அவர்களது லட்சியங்களை சிதைக்கும் ஆபாச வீடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாகும்.

You may also like

Leave a Comment

1 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi