யு-19 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் இருந்து தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம்

அகமதாபாத்: இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு நடைபெற இருந்த யு-19 ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணி தகுதிச்சுற்று மூலம்தான் முன்னேறியது. லீக் சுற்றில் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடம் பிடித்ததால், அடுத்த உலக கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது. அடுத்த முறையும் தகுதிச்சுற்றில் விளையாடி வென்றால் தான் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற பரிதாப நிலையில் உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு அரசு, உடனடியாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்ததுடன் இடைக்கால நிர்வாகக் குழுவையும் நியமித்தது. அரசின் இந்த தலையீடு ஐசிசி விதிமுறைகளுக்குப் புறம்பானது என்பதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அந்தஸ்தை சஸ்பெண்ட் செய்வதாக ஐசிசி அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில் ஐசிசியின் வாரியக் கூட்டம் நேற்று அகமதாபாத்தில் நடந்தது.

அதில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த யு-19 ஆண்கள் உலக கோப்பை தொடரை (ஜன.13 – பிப். 4) தென் ஆப்ரிக்காவில் நடத்துவது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பினோனி, போட்செப்ஸ்ட்ரூம் மைதானங்களில் போட்டிகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாட உள்ளன. ஏ பிரிவில் 5 முறை சாம்பியனான இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!