அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் தகனமேடை இல்லாத சுடுகாடு: சடலங்களை எரிப்பதில் சிக்கல்

அம்பத்தூர்: சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 82வது வார்டு, கள்ளிகுப்பத்தில் கங்கை நகர், தென்றல் நகர், சக்தி நகர், மூகாம்பிகை நகர், இந்துஸ்தான் நகர், காந்தி நகர், பசும்பொன் நகர், பசும்பொன் நகர் மேற்கு, பசும்பொன் நகர் விரிவாக்கம், பாலவிநாயகர் நகர், மலர் நகர், சீனிவாசன் நகர், ஓம்சக்தி நகர், கந்தகோட்டம் நகர், பாலாஜி நகர், மேற்கு பாலாஜி நகர், முத்தமிழ் நகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.

இங்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான சுடுகாடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு தகன மேடை இல்லாததால் திறந்த வெளியில் சடலங்களை வைத்து எரிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, மழைக் காலங்களில் சடலத்தை முழுமையா எரியூட்ட முடியாத நிலை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இதுபோன்ற நேரங்களில் சடலங்கள் பாதி எரிந்தும், எரியாமலும், எலும்பும், சதையுமாக, மண்டை ஓடுமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. சடலங்களை புதைக்க போதுமான இடவசதி இல்லாததால் ஒரு சடலத்தை புதைத்து சில நாட்களிலேயே அதை அகற்றி விட்டு வேற சடலங்களை புதைக்க கூடிய நிலை உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் சுடுகாட்டில் தேவையான தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் தகுந்த பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளிக்குப்பம் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து 82வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் கூறுகையில், ‘‘சுடுகாடு சீரமைப்பு பணிக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பே ரூ.9,10,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்,’’ என்றார்.

Related posts

காவிரியில் நீர் திறப்பு 3,432 கனஅடியாக அதிகரிப்பு..!!

இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு!!

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை