Friday, July 12, 2024
Home » கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டதை தாண்டி வழங்கி சாதனை: வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதல்வர் உரை

கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டதை தாண்டி வழங்கி சாதனை: வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதல்வர் உரை

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16.8.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான மூன்றாவது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை.
மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான மூன்றாவது ஆய்வுக் கூட்டம் இன்றைய தினம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை புரிந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை ரெவ்யூ மீட்டிங்குகளாக அமைந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த திட்டமாக இருந்தாலும், அதனைக் கண்காணித்துக் கொண்டே இருந்தால்தான் அது தொய்வில்லாமல் தொடரும். அந்த வகையில், மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பங்கை மிகமிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

நமது அரசின் சார்பில் ஆலோசனைகளைப் பெற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான், இந்தக் குழுவும் சிறப்பான பணிகளை செய்து வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை ஆகிய நான்கு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று ஆய்வு செய்ய இருக்கிறோம். உங்களிடம் முழுமையான புள்ளிவிபரங்கள் இருக்கும். இருப்பினும், சில முக்கியத் தகவல்களை மட்டும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

* தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்புக்காக 2023-2024-ஆம் ஆண்டில் புதியதாக 10 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குச் சுழல் நிதியாக வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக 75 கோடி ரூபாயும், 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக 7.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கவும், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க 3.30 கோடி ரூபாய், 12,287 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் 388 வட்டார அளவிலான கூட்டமைப்புகளின் அலுவலக நிர்வாகிகளுக்கு ஆளுமை மற்றும் நிதிமேலாண்மை குறித்த புத்தாக்கப் பயிற்சி வழங்க 24 கோடியே 96 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2023-24-ஆம் ஆண்டில் பண்ணை வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 60.27 கோடி ரூபாயும், பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கை பணிகளுக்காக 18.64 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 2022-23-ஆம் ஆண்டில் நடைபெற்ற கண்காட்சிகளில் 3,528 சுய உதவிக் குழுக்கள் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 137 விற்பனை அங்காடி (Kiosk) அமைக்கப்பட்டு சுய உதவிக் குழு தயாரிப்புகளை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுவதுடன், முறையான பேக்கிங் மற்றும் தயாரிப்புகளை தரப்படுத்துவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு மதி வணிக முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
* 2022-2023-ஆம் ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்க 25 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையும் தாண்டி 25 ஆயிரம் 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கி, நமது அரசு சாதனை புரிந்துள்ளது என்பதை இங்கு பெருமிதத்துடன் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
* கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 45 ஆயிரம் கோடி ரூபாயினையும் தாண்டி 47 ஆயிரத்து 34 கோடி ரூபாய் வழங்கி சாதனை புரிந்துள்ளோம்.
* 2023-2024-ஆம் ஆண்டு வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 30 ஆயிரம் கோடி ரூபாயில், 30.06.2023 வரை, சுய உதவிக் குழுக்களுக்கு 5,644 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

2023-24-ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி சந்தை’என்ற இணையவழி விற்பனை தளம் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் – விற்போர் சந்திப்பு நடத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ‘மதி அங்காடிகள்’ நிறுவப்படுவதுடன், சிறப்பு சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்படவுள்ளன. மேலும் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் ‘மதி திணை உணவகங்கள்’, ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளன.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழு உறுப்பினர்களைப் பயிற்றுவித்து, அவர்களின் பங்கேற்பின் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பிரதான் மந்திரி போஷன் சக்தி நிர்மன் – சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் ஆண்டில், 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் சுகம்யா பாரத் அபியான் (தடையற்ற சூழலை உருவாக்குவதற்கான இயக்கம்) – மாநில அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் சமுதாயத்தில் மாற்றுத் திறனாளிகள் அணுகத்தக்க சூழலை ஊக்கப்படுத்துவதற்காகத் தணிக்கை நடவடிக்கையினை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் 93 கோட்டாட்சியர் அலுவலகங்கள், 312 வட்டாட்சியர் அலுவலகங்கள், 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என மொத்தம் 790 கட்டடங்களில் ரூ.4.74 கோடி செலவிலும், 200 சுற்றுலா தலங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவிலும் தணிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை – உழவர் நலத் துறையின் மின்னணு தேசிய வேளாண் சந்தை (e-NAM) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 284. இதில் 2021 வரை முதல் கட்டமாக, 63 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்பட்டன. 2021-22 ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டமாக 64 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மற்றும் 2023-ஆம் ஆண்டில், மூன்றாம் கட்டமாக 30 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட்டுள்ளன.

“நன்றே செய் – அதையும் இன்றே செய்” என்ற வகையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்தி, திட்டங்களின் பயன் முழுமையாக மக்களைச் சென்றடைய துறைத் தலைவர்களும், அரசு அலுவலர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும். தங்களுக்குக் கீழ் பணியாற்றுவோரும் அவ்வாறு செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என முதல்வர் கூறினார்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஆ. ராசா, சு. திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், கே. நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், டாக்டர் நா. எழிலன், ஜே.எம்.எச். அசன் மவுலானா, கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்குமார், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi