பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியாகினர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சோலை காலனியை சேர்ந்த முருகவேல் (58) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று காலை 7 மணியளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் மணி மருந்து கலக்கும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் மணி மருந்தை வாளியில் எடுத்து வந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

அந்த அறையில் இருந்த வெள்ளூர் சிதம்பராபுரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். சித்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரோஜா (50), செவலூரைச் சேர்ந்த சங்கரவேல் (52) ஆகியோர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். படுகாயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து எம்.புதுபட்டி போலீசார் ஆலை உரிமையாளர் முருகவேல், போர்மேன் குணசேகரன் (60), மேனேஜர் பன்னீர்செல்வம் (60) ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிந்து, குணசேகரன், பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

ரூ.3 லட்சம் நிதியுதவி; முதல்வர் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் பலியான மாரியப்பன், முத்துமுருகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை

செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்