Friday, June 28, 2024
Home » பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும் : சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து முதல்வர் விளக்கம்!!

பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும் : சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் குறித்து முதல்வர் விளக்கம்!!

by Porselvi
Published: Last Updated on

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருநெல்வேலி மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக இங்கே உறுப்பினர்கள் திரு. V.P. நாகைமாலி, திருமதி. வானதி சீனிவாசன், திரு. தி.வேல்முருகன், திரு. எம்.எச். ஜவாஹிருல்லா, திரு. சதன் திருமலைக்குமார் திரு. ம.சிந்தனை செல்வன், திரு.ட்டி, இராமச்சந்திரன், திரு. செ. ராஜேஷ்குமார் ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். அது தொடர்பாக இந்த அவைக்கு சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூகநீதிக் கொள்கையை தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி, சமஉரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள்.

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இதுபோன்ற இனங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது.உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் காவல் சரகம், புதுக்கூரைப்பேட்டையில் 8.7.2003 அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கடந்த 29.2.2024 அன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல, 2015 ஆம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் கோகுல்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு முறையாக கண்காணிக்கப்பட்டு, வேகப்படுத்தப்பட்டு, இம்மாதம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில், மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் 8.3.2022 அன்று வழங்கிய தீர்ப்பு, மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையால் உறுதிசெய்யப்பட்டது.

அதேபோல, கடலூர் மாவட்டத்தில் ஆதிவராகநத்தத்தைச் சேர்ந்த சீதா என்பவர் 15.6.2014 அன்று கொலை செய்யப்பட்டதையடுத்து, தொடர்புடைய குற்றவாளிகள் 16.7.2014 அன்று கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணையை, இந்த அரசு பொறுப்பேற்றதற்குப்பிறகு வேகப்படுத்தி 29.2.2024 அன்று குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.எனவேதான், நான் முன்பு தெரிவித்தபடி, இதுபோன்ற குற்றங்களில் வழக்குகளை முறையாக நடத்தி, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனைப் பெற்றுத்தருவது என்பது, புதிய சட்டங்களை இயற்றுவதைவிட சரியானதாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது.

இந்தக் குற்றங்களை வெறும் குற்றவியல் நிகழ்வாக மட்டும் பார்க்காமல், இதன் சமூகப் பொருளாதார பின்னணிக் காரணிகளை வைத்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவது ஒருபுறம் இருந்தாலும், சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக பெண் கல்வி உயரும்போதும், கல்வி பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஒரு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக உயரும்போதும் இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.அதுபோன்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம், அதன் காரணமாகவே, நாம் நடைமுறைப்படுத்தும் புதிய திட்டங்களில் எல்லாம் பெண்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கல்வியை, அவர்களது உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம்.

எடுத்துக்காட்டாக, புதுமைப் பெண் திட்டம், பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் நாம் தொடர்ந்து கொண்டுசெல்லும்போது சமூகத்தில் மனமாற்றம் ஏற்படும். புதிய புதிய சட்டங்களுக்கான தேவையும் குறையும். அதை நோக்கித்தான் இந்த அரசு பயணிக்கிறது.இருப்பினும், தற்போது நமது இலக்கு சற்று தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், நடைமுறையில் இன்று சந்தித்து வரும் சமூகரீதியிலான பிரச்சினைகளை, அதன் விளைவுகளை இங்கே பேசிய உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப்போல உடனடியாக எதிர்கொள்ளவும், அதற்கொரு தனி முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் (Special Public Prosecutors) நியமிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, தற்போது இதுபோன்ற குற்றங்களில் எல்லாம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார். ஆனால், இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், வேகப்படுத்தும் நோக்கிலும் விசாரணை அலுவலராக காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, உறுப்பினர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, இக்குற்றங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட அளவிலான குழுக்கள், அவை அமைக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றியெல்லாம் மீண்டும் ஆய்வு செய்து, அதுகுறித்தும் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்து அமைகின்றேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi