ஆந்திராவில் ஓடும் கோதாவரி-காவிரியை இணைக்க வேண்டும்: சந்திரபாபு நாயுடுவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கோரிக்கை


அமராவதி: ஆந்திராவில் ஓடும் கோதாவரி ஆற்றுடன், கிருஷ்ணா ஆறு வழியாக காவிரியை இணைக்க வேண்டும் என்று தெலங்கானா, புதுவை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருப்பவர் திருப்பூரைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் தெலங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார். கடந்த வாரம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று முன்தினம் அமராவதியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது ஆந்திராவின் முதல்வராக பதவி ஏற்றதற்காக சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்னர் தற்போதைய அரசியல் சூழ்நிலை, ஆட்சி குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் பேசும்போது, ‘‘நண்பர் என்ற முறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினேன். மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். தற்போது அரசியல் நிலவரம் மட்டுமல்லாது தமிழகத்திற்கு தேவையான சில கோரிக்கைகளை அவரிடம் முன் வைத்தேன். அதில் முதன்மையானது ஆந்திராவில் ஓடும் கோதாவரியை காவரியுடன் இணைக்க வேண்டும்.

அதற்காக முதலில் கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைக்க வேண்டும். பின்னர் கிருஷ்ணாவை, காவிரியுடன் இணைக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேறினால், தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நிலவும் வறட்சி முற்றிலும் நீங்கிவிடும். காவிரி பகுதி எப்போதும் செழிப்புடன் இருக்கும். இந்த திட்டம் நிறைவேறுவதற்கு தேவையான உதவிகளை நான் செய்வேன். பிரதமர் மோடியிடம் பேசி தேவையான நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கைக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன். அவரும் தேவையான நேரத்தில் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்’’ என்றார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்