மாடுகள் அடுத்தடுத்து பிடிபட்டால் ஏலம் விடப்படும்: விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று கே.என்.நேரு அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சிகளில், தெருநாய்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்த, பிராணிகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் நாய் இனக்கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் இப்பணிக்காக 78 பயிற்சி பெற்ற பணியாளர்களும், 16 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு.

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசியும், நாய் இனக்கட்டுப்பாடு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு, 3 முதல் 5 நாட்களுக்கு பராமரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளின்படி, தெரு நாய்களை ஒரு தெருவில் ஒரு இடத்தில் பிடித்து அறுவை செய்யும் இடத்திற்கு கொண்டு சென்று, தகுந்த உணவளித்து அறுவை சிகிச்சை செய்து, சிகிச்சைக்கு பின் நான்கு நாட்கள் பராமரித்து, பின்னர் பிடித்த அதே தெருவில் அதே இடத்தில் விட வேண்டும். தவறினால் நகர்புற உள்ளாட்சி அலுவலர்கள் தண்டிக்கப்பட சட்டத்தில் வழிவகை உள்ளது. அதேபோன்று தெரு நாய்களுக்கு உணவு வழங்குபவர்கள் மற்றும் தன்னார்வலர்களை தடுத்தாலும் குற்றமே. இவை அனைத்துக்கும் உட்பட்டே தெரு நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளுக்கு 5473 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவற்றை வளர்க்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கணக்கெடுக்கவும் கருத்தடை சிகிச்சை முறையினை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாடுகள் முதல் முறை பிடித்தால் 5000 ரூபாய், இரண்டாம் முறை பிடிக்கப்பட்டால் 10000 ரூபாய் அபராதம், மூன்றாவது முறையாக பிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை