கறவை மாடுகளைத் தாக்கும் மடிநோய்…

கறவை மாடுகளைத் தாக்கும் முக்கிய நோய்களில் மடிநோயும் ஒன்று. இந்த நோய் நாட்டு மாடுகளை விட, அதிகமாக பால் கறக்கும் கலப்பின (ஜெர்சி கலப்பினம் மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியன் கலப்பினம்) மற்றும் உயர் ரக வெளிநாட்டின மாடுகளை அதிகமாகத் தாக்கும். சுகாதாரமற்ற மாட்டுக் கொட்டகைகளிலும், பால் மடியில் தங்குவதாலும், வயதான மாடுகளில் கன்று ஈன்ற முதல் மாதத்திலும், பால் கறவை நிறுத்திய அடுத்த இரு வாரங்களிலும், மடி மற்றும் மடிக்காம்புகளில் காயம் ஏற்படும்பொழுதும் இந்நோய் மாடுகளை அதிகமாகத் தாக்கும். இந்நோயினால் இந்திய விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் இழப்பைச் சந்திந்துவருகிறார்கள். நோய் பாதித்த மாடுகளில் பால் உற்பத்தி மட்டுமில்லாமல், பாலின் தரமும் குறைந்து விடும். சில சமயங்களில் மாடுகள் இறந்துபோகவும் வாய்ப்பு ஏற்படும். இத்தகைய நோயின் தன்மைகள் குறித்தும், அதைக் கட்டுப்படுத்தும் முறை குறித்தும் விளக்குகிறார் சேலம் கால்நடை ஆராய்ச்சி நிலைய மருத்துவர் பாபு.

மடிநோயினை சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். சாதாரணமாக இந்நோய் பாதித்த மாடுகளில் காய்ச்சல் அதிகமாகவும், மடிப்பகுதியானது சற்று பெரியதாகவும், சிவந்தும், வீங்கியும், சூடாகவும் காணப்படும். மடிப்பகுதியைத் தொடும்பொழுது மடியானது மிருதுவாக இல்லாமல் சற்று கெட்டியாகவும், கடினமானதாகவும் இருக்கும். மடியில் வலி அதிகமாக இருப்பதால், மாடுகள் நம்மை மடியைத் தொட விடாமல் உதைக்க முயற்சிக்கும். சில சமயங்களில் பாலானது மஞ்சள் நிறமாகவும், ரத்தம் கலந்தும், தயிர் போன்று திரி திரியாகவும் காணப்படும். மாடுகளில் பால் உற்பத்தி குறைந்தும், சில சமயங்களில் பால்மணம் துர்நாற்றம் கொண்டதாகவும், மாடுகள் சோர்வாக தீவனம் உட்கொள்ளாமலும் இருக்கும்.

மடிநோயில் பல வகைகள் உண்டு. சில வகைகளில் எந்த விதமான அறிகுறிகளும் தென்படாது. மடிநோயின் தன்மையைப் பொறுத்து மடிநோயினை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை நோய் அறிகுறிகள் வெளியே தெரியாத தொடக்கநிலை மடிநோய், நோய்க்குறிகள் கொண்ட மடிநோய் ஆகும். இதில் நோய்க்குறிகள் கொண்ட மடிநோயினை, உடனடி நோய்க்குறிகள் கொண்ட மடிநோய், நாள்பட்ட மடிநோய், கோடைகாலம் அல்லது கிடேரிகளைத் தாக்கும் மடிநோய் மற்றும் மடி அழுகல் மடிநோய் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம்.நோய்க்குறிகள் கொண்ட மடி நோயினை அறிகுறிகளைக் கொண்டு நாம் கண்டறியலாம். உடனடி நோய்க் குறிகள் கொண்ட மடிநோயில் திடீரென அதிக காய்ச்சல், விரைவான நாடித் துடிப்பு, பாலின் அளவு திடீரென குறைதல், மடி உடனடியாக வீங்குதல் போன்ற அறிகுறிகள் நம் கண்களுக்குத் தென் படும். அதனால் உடனடியாகச் சிகிச்சை அளித்து மாடுகளைக் குணப்படுத்தலாம். ஆனால் நோய் அறிகுறிகள் வெளியே தெரியாத தொடக்கநிலை மடிநோய் மிகவும் ஆபத்தானது. பெரும்பாலான மடிநோய்கள் இந்த வகையைச் சார்ந்தது தான். இந்நோய் கறவைக்காலம் முழுவதும் பால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டே இருக்கும். இந்நோய்தான் உடனடி நோய்க்குறிகள் கொண்ட மடிநோய் மற்றும் நாள்பட்ட மடிநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையாகும். இந்நோயில் எவ்வித அறிகுறிகளும் வெளியில் தென்படாது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் மற்ற மாடுகளுக்கு இந்நோயினை பரப்பிக்கொண்டே இருக்கும். சராசரியாக நோய்க்குறிகள் கொண்ட மடிநோய் ஒரு மாட்டைத் தாக்கினால், நோய் அறிகுறிகள் வெளியே தெரியாத தொடக்கநிலை மடிநோய்
பெரும்பாலான மாடுகளைத் தாக்கும்.

மரபுசார் மூலிகை மருத்துவத்தில் சிகிச்சை முறைகள் உண்டு. முதலில் சோற்றுக் கற்றாழை 250 கிராம் (நன்கு வளர்ந்த ஒரு பெரிய மடல் குருத்துடன் அல்லது இரு சிறிய மடல் குருத்துடன்), மஞ்சள் தூள் 50 கிராம், சுண்ணாம்பு அல்லது சாக்பீஸ் 15 கிராம் ஆகிய மூன்றையும் கையளவு தண்ணீர் விட்டு, நன்கு அரைத்து மடியில் தடவிவிட வேண்டும். பார்ப்பதற்கு நன்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறை இவ்வாறு செய்திடல் வேண்டும். மேலும் மடிநோய் பாதித்த பின் மடியில் உள்ள பாலை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கறந்து அப்புறப்படுத்தி விட வேண்டும். மேலும் மடிநோய் பாதித்த காலங்களில் மடியில் பால்சுரப்பைக் குறைப்பதற்காக தீவனத்தின் அளவை 30 சதவீத அளவு குறைத்து விட வேண்டும்.

மாட்டுக் கொட்டகையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். மாட்டுக் கொட்டகையில் சாணம், சிறுநீர் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி, மாட்டுக்கொட்டகையை உலர்ந்த நிலையிலேயே வைத்திருத்தல் வேண்டும். மாட்டுக் கொட்டகையில் குறிப்பாக, பால் கறக்கும் இடம் சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். மடிக்காம்பில் முதலில் வரும் பாலில் நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் பாலைக் கொட்டகையிலேயே பீய்ச்சி விடாமல், தனியாக பாத்திரத்தில் பீய்ச்சி அப்புறப்படுத்த வேண்டும். பாலைத் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் கறந்து விட வேண்டும்.

தொடர்புக்கு:
மருத்துவர் பாபு: 98427-46676

கண்டறிவது எப்படி?

‘‘பாலின் அமிலக் காரத் தன்மையைக் கொண்டும் மடிநோயால் பாதிக்கப்பட்ட மாட்டினைக் கண்டறியலாம். அமிலக் காரத் தாளில் (புரோமித்தால் புளூ ஆய்வு) பாலினை விடும்பொழுது வெளிர் பச்சை, அடர் பச்சை அல்லது நீலமாக மாறினால் நோய்த் தாக்கம் உள்ளதைக் கண்டறியலாம். இதுமட்டுமில்லாமல் பாலின் மின் கடத்தும் தன்மை எனும் ஆய்வில் மடிநோயால் பாதிக்கப்பட்ட பாலின் மின்கடத்தும் தன்மை அதிகமாக இருக்கும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலில் சோடியம் மற்றும் குளோரின் அயனிகள் அளவு அதிகரித்தும், பொட்டாசியம் அயனி மற்றும் லாக்டோஸ் அளவு குறைந்தும் காணப்படுவதே இதற்கு காரணம்.

 

Related posts

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்