நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிக்க ஆளுநர் முடிவு எடுக்காமல் நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா?: அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில், ஐகோர்ட் பரீசிலிக்க முடியுமா? என்று விளக்கம் அளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதிகளாக நீண்டகாலம் சிறையில் உள்ள எஸ்.ஏ.பாஷா, சாகுல் அமீது, ஜாகீர் உசேன், விஜயன், பூரிகமல் உள்ளிட்ட 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி குடும்பத்தினர் தொடர்ந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை ஆளுநர் முன்பு நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலருக்கு இடைக்கால ஜாமீனும், சிலருக்கு விடுப்பும் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே விடுப்பில் உள்ள 10 பேர் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நீண்ட நாள் சிறைவாசிகளான ஷம்மா உள்ளிட்ட இருவரின் விடுப்பை நீடிப்பது தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களின் விடுப்பை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரை ஆளுநர் முன்பு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றமே பரிசீலிக்க முடியுமா என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அரசிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. ஆளுநரிடம் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார். இதையடுத்து, முன்கூட்டி விடுதலை செய்வது குறித்த தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

Related posts

நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழப்பு

10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை

நேபாளத்தில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு..!!