சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் குறைந்தது: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தென்காசி: விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சாரல் இல்லாமல் வெயிலும் அடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. அனைத்து அருவிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முழுவதும் சீசன் கண்ணாமூச்சி காண்பித்து விட்டது. ஜூலை மாதத்தில் முதல் 10 தினங்கள் சீசன் அருமையாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரமாக சாரல் இல்லாததால் டல் அடிக்க துவங்கியுள்ளது. நேற்றும் மாலை வரை சாரல் இல்லை. சுள் என்று வெயில் அடித்தது.

அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. ஒரு பிரிவில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. பழைய குற்றால அருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. புலி அருவியிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுகிறது.

விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அலைமோதியது. ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அணிவகுத்து வந்திருந்தனர் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆண்களும் பெண்களும் குளித்தனர். ஒருவழிப்பாதையும் அமல்படுத்தப்பட்டது. ஐந்தருவி செல்லும் வாகனங்கள் வழக்கமாக வனத்துறை அலுவலகம் வழியாகவும், ஐந்தருவியிலிருந்து வெளியே வரும் வாகனங்கள் ஐந்தருவி இலஞ்சி சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டது.

அதேபோன்று செங்கோட்டையிலிருந்து குற்றாலத்திற்கு வருகை தந்த வாகனங்கள் ராமாலயம் காலனி வழியாக திருப்பி விடப்பட்டது. நேற்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்ட நிலையில் போலீசாரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்தது. அருவிகளில் நேற்று கூட்டத்தை பயன்படுத்தி சில செயின் பறிப்பு சம்பவங்களும் நடந்தது.

Related posts

மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு