சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பி.எஸ் விடுதலையில் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது: நீதிபதி காட்டமான கருத்து

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட விஷயத்தில் நீதிமன்றம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது என்று உயர் நீதிமன்ற நீதிபதி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். 2001 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் முதல்வராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள், முகாந்திரம் இல்லாததால் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்து 2012ல்உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்கப் போவதாக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது: இந்திய நீதித்துறையிலேயே இது ஒரு வித்தியாசமான வழக்கு. குற்றவாளியே மேல் விசாரணை கோரி அதன் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் 374 மடங்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 272 சாட்சிகள் 232 ஆவணங்களும் சேர்க்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் வந்தது. இதையடுத்து, குற்றவாளியான ஓ.பன்னீர்செல்வமே தன்மீதான வழக்கில் மேல் விசாரணை கோரியுள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்று மேல் விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் மேல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போதைய அட்வகேட் ஜெனரல், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரும் ஒப்புதல் அளித்தது துரதிர்ஷ்டவசமானது. அந்த அறிக்கையை ஆய்வு செய்து வழக்கு தொடர்வதற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று அப்போதைய சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். சபாநாயகர் நீதிபதியைப் போல் செயல்பட்டுள்ளார். ஆனால், அந்த மேல் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக வழக்கை குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 321ன்கீழ் திரும்ப பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறை மனு தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட தேனி நீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி, மகன், தம்பி, தம்பி மனைவி உள்ளிட்டோர் விடுதலை செய்துள்ள்ளது.இதற்கிடையே இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது மேல் விசாரணை குறித்து சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கே மாற்றி உத்தரவிட்டது. அந்த நீதிபதி குறித்து தெரிவிக்க விரும்பவில்லை.இது குற்றவியல் நீதி வழங்கும் முறைக்கு அவமானம். லஞ்ச ஒழிப்பு துறை துரதிர்ஷ்டவசமாக ஒரு பச்சோந்தியாக மாறிவிட்டது.

யார் அதிகாரத்தில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அதன் நிறங்களை எடுக்கத் தொடங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றங்களும் இணைந்து செயல்பட்டன. இப்படிப்பட்ட அமைப்பு ரீதியான தோல்வியைக் கண்டு உயர்நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், நாம் நமது அரசியலமைப்பு கடமையில் தவறியவர்களாகி விடுவோம். ஏ கட்சி, பி கட்சி என்று நீதிமன்றம் பார்க்காது. அமைப்பு உடைக்கப்படாமல் இருப்பதை மட்டுமே நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு (ஓபிஎஸ்க்கு எதிரானது) தொடக்கப் புள்ளிதான். உச்சநீதிமன்றமே வழக்கிற்கு தரப்பட்ட அனுமதியை திரும்ப பெற முடியாது என்று தெரிவித்துள்ள நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கிற்கு வழங்கப்பட்ட அனுமதியை எப்படி திரும்ப பெற முடிந்தது. புறையோடிப்போன ஊழலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையே ஆட்சி மாற்றத்தையடுத்து தனது நிறத்தை மாற்றி வருவது துரதிஷ்டவசமானது. எந்த அரசியல் அதிகாரத்திற்கும் கட்டுப்படாமல் செயல்படும் ஒரு அமைப்பு தேவையாகிறது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் தனது கடமையிலிருந்து தவறியுள்ளது. எனவே தான் இந்த வழக்கை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் லஞ்ச ஒழிப்பு துறையும் பதிலளிக்க வேண்டும். வழக்கு செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு