நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலர் தன்னிச்சை போராட்டம் நடத்தினர். அச்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related posts

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்: கட்டுப்பாடுகளை மீறினால் கைது: காவல்துறை எச்சரிக்கை