நீதிமன்ற தடைஉத்தரவை காண்பித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் விட்டு சென்ற அதிகாரிகள்

திருவொற்றியூர்: மணலியில் நீதிமன்ற தடைஉத்தரவை காண்பித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் விட்டுவிட்டு அதிகாரி சென்றதால் பரபரப்பு நிலவியது. மணலி மண்டலம் 21வது வார்டு பாடசாலை தெருவில் ரூ.2.64 கோடி செலவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை பணிக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என வார்டு கவுன்சிலர் முல்லை ராஜேஷ்சேகர், மணலி மண்டல குழு கூட்டத்தில் தலைவர் ஏ.வி.ஆறுமுகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினருடன் இணைந்து ஆக்கிரமிப்பை கணக்கெடுத்து நோட்டீஸ் வழங்கி தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்நிலையில், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் மற்றும் அலுவலர்கள் போலீசாருடன் மணலி பாடசாலை தெருவிற்கு நேற்று வந்தனர். பின்னர், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள், உதவி பொறியாளர் சிவசக்தியிடம் கடைகளை இடிக்க கூடாது என வாக்குவாதம் செய்தனர். இதனால் 2 மணி நேரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாமதமானது. இதனிடையே, அங்கு வந்த வழக்கறிஞர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்க நீதிமன்றம் மூலம் தடைஉத்தரவு வாங்கியிருப்பதாக கூறி ஆவணங்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதையடுத்து அதிகாரிகள் 60 சதவீத ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் பணியை கைவிட்டு பொக்லைன் இயந்திரந்துடன் திரும்பிசென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Related posts

மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள் திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பதிலடி

மீனவர்கள் ஸ்டிரைக்

ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி