குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு தனியார் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதிப்பு

செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் குண்டாறு அணை மேற்பகுதியில் அமைந்துள்ள கண்ணுபுளிமெட்டில் 10க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளது. இந்த அருவிகளுக்கு ஜீப்பில் செல்ல ஒரு குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குற்றாலத்தில் தற்போது பெய்து வரும் மழையால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உட்பட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கண்ணுபுளிமெட்டு பகுதியில் உள்ள தனியார் அருவிகளுக்கு படையெடுத்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்துஆர்டிஓ லாவாண்யா தலைமையில் வருவாய்த்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றி தனியார் அருவிகளுக்கு செல்லாதவாறு குண்டாறு அணையின் கீழ் பகுதியில் நுழைவாயில் கேட்டிற்கு பூட்டு போட்டனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போன்று குண்டாறு அணைப்பகுதிகளில் குளிக்கவும் தடை விதித்துள்ள போலீசார் அதையும் மீறி குளிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இது குறித்து ஆர்டிஓ லாவண்யா கூறுகையில், ‘தனியார் அருவிகளில் குளிக்க ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். எனவே தற்காலிகமாக அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அருவிகள் செயற்கையாக உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள வழித்தடம் தான். எனவே அருவிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படவில்லை’ என்றார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு