கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

மதுரை : மதுரையில் மதுரை உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த வங்கிக் கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கடன் வசூல் தீர்ப்பாயம் (டிஆர்டி) உள்ளது. இந்த தீர்ப்பாயம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த தனபாலன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” ரூ.1.7 கோடி கடனை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி திருச்சி கனரா வங்கி நிர்வாகம் வீட்டிற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டது. மதுரை கடன் வசூல் தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.,) நீதிபதி விடுப்பில் சென்றுள்ளார். கோவை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. கேரளா எர்ணாகுளத்திலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தை அணுகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல இயலாததால் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எனவே திருச்சி கனரா வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், “இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மதுரை, கோவை தீர்ப்பாயங்களில் அதிகாரி இல்லை என்பதால் கேரள எர்ணாகுளம் கடன் வசூல் மையத்திற்கு மனுதாரர்களை செல்ல சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசின் இந்த செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பதுபோல் உள்ளது. கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம். கடன் தீர்ப்பாயத்தின் நிலை குறித்து ஒன்றிய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்,”என காட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து, நீங்கள் கூறும் கருத்துகளை செய்தியாக வெளியிட்டு விடுவார்கள் என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்ததற்கு, ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கூட தீர்வு காணப்படுமா என்று பார்ப்போம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், திருச்சி கனரா வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105°F வெப்பம் பதிவு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜாமினில் விடுவிப்பு

பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு!