நீதிமன்ற கட்டிடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகள் கட்ட அடிக்கல்நாட்டு விழா; நீதி இல்லாத நூல்களே தமிழில் கிடையாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பெருமிதப் பேச்சு

சென்னை: `தமிழ் என்றாலே நீதி; நீதியின் மொழி என்றாலே தமிழ்’. `தமிழ் மொழியில் நீதி இல்லாத நூல்களே கிடையாது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பங்களா வீடுகள், பழைய சட்டக் கல்லுாரி வளாகத்தில் குற்றவியல், சிவில் நீதிமன்றங்கள், நீதிபதி அறைகள் கொண்ட 5 மாடிக் கட்டிடம் ஆகிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:நீதிமன்றங்களுக்காக கட்டப்படும் பிரம்மாண்ட கட்டிடத்தின் மதிப்பு், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் நீதிபதிகளின் செயல்பாட்டில்தான் உள்ளது.

உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் எப்போதும் திருவள்ளுவர் சிலையை பிறருக்கு பரிசாக கொடுப்பார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, வள்ளுவரை அனைவரும் உணரத் தொடங்கிவிட்டனர் என்றார். தமிழ்மொழியில் நீதி இல்லாத நூல்களே கிடையாது. அதனால், தமிழ் என்றாலே நீதி. நீதியின் மொழி என்றாலே தமிழ் மொழி என்றுதான் கூறுவேன். திருவள்ளுவர் எந்த சமயத்தையும், மதத்தையும் சேர்ந்தவர் அல்ல. எந்த ஒரு இறைவனையும் குறிப்பிட்டுச் சொன்னதும் கிடையாது. ஆனால், நீதி பரிபாலனம் குறித்து கூறும்போது, இறைபுரிந்து என்கிறார்.

தமிழில் அறம் மட்டுமே இருக்கும். அதனால்தான் கம்பன் நீதிமன்றத்தை அறம்புரி அரங்கம் என்று கூறினார். எல்லோருடைய வாழ்விலும் ஓய்வு என்பது கண்டிப்பாக உண்டு. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா ஓய்வு பெற உள்ளார். அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். ஓய்வு பெறப்போகும் தலைமை நீதிபதிக்கும், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள ஆர்.மகாதேவனுக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற கட்டிட குழுத் தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அனைத்து நீதிபதிகள் மற்றும் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஆர்.நீலகண்டன், பி.முத்துக்குமார், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட நீதிமன்ற ஊழியர்களுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி நிவாரண நிதி திட்டத்தை, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 21 ஆயிரம் நீதிமன்ற ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று தலைமை நீதிபதி கூறினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு