3 சட்டங்களை வாபஸ் கோரி 8ம் தேதி கோர்ட் புறக்கணிப்பு: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்ததுடன் சட்டப் பிரிவுகளின் எண்களையும் மாற்றம் செய்துள்ளது. இது நாடெங்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், நீதிமற்ற புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் சங்க அவசர பொதுக்குழு நேற்று நடந்தது. செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு மற்றும் மூத்த, இளைய செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திங்கட்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பிறகு சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கூறும்போது, ‘‘அனைத்து தரப்பு மக்களுக்கும், நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களும் பெரிய சிக்கலையும், பாதகத்தையும் உருவாக்கியுள்ள இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பழைய சட்டங்களையே மீண்டும் அமலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் அனைத்து வழக்கறிஞர்களும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை