நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் வைக்க அனுமதி மறுப்பு சென்னையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசியலமைப்பை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கரின் புகைப்படங்களை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்று கடந்த 7ம் ேததி சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் சுற்றறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், உடனடியாக சுற்றறிக்கையை திரும்பப்பெறக்கோரியும் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் அருகே நேற்று பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் விஜயகுமார், அருள்மொழி கூறும்போது, இதுபோன்ற சுற்றறிக்கையை உயர் நீதிமன்றம் அனுப்புமென்று வழக்கறிஞர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றம் அகற்றுமேயானால் அதைவிட பெரிய அவமானம் நீதிமன்றத்திற்கு வேறு ஏதுமில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலையிட வேண்டும். உடனடியாக 7ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்றார். பின்னர், வழக்கறிஞர்கள் அனைவரும் ரோஜா பூவை கையில் ஏந்தி உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக வைத்திருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் எம்.வேல்முருகன் தலைமையில் ஏராளமானோர் அம்பேத்கர் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்ற சுற்றறிக்கையை எதிர்த்தும், அந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம்: தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராம் தலைமையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆலந்தூர்: ஆலந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று பணியை புறக்கணித்து நீதிமன்ற நுழைவாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும், என்ற உத்தரவை திரும்ப பெறு, அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதி வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பால.அமுதநாதன், சேகர், சந்திரசேகர், ஆனந்தகுமார் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை