தம்பதியை கொலை செய்து சடலங்களுடன் காரிலேயே சுற்றிய கும்பல்: விசாரணையில் பரபரப்பு தகவல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தடங்கம் அருகே வெத்தலகாரன்பள்ளம் கிராமத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள பகுதியில், கடந்த 24ம் தேதி அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் கத்திக்குத்து காயங்களுடன் அழுகிய நிலையில் கிடந்தன. தகவலின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இருவரையும் வேறு எங்கோ கொலை செய்து உடல்களை எடுத்து வந்து இங்கு வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட 2 பேரின் படங்களை, தமிழகத்தின் அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (55), அவரது மனைவி பிரேமலதா (50) என்பது தெரியவந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஆன்லைன் மூலம் டிரேடிங் வியாபாரம் செய்து வந்த இவர்களுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட மை வி 3 என்ற கம்பெனியில் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் கடந்த சில மாதங்களுக்கு சுமார் ரூ.40 கோடி முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். அந்த பணத்தை வைத்து வேறு தொழில் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த நேரத்தில் தேனியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் முதலீட்டு பணத்தில் நிலத்தை வாங்குவது பற்றி பேசி உள்ளனர். இந்நிலையில் தேவராஜ், தம்பதியினரிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் நிலம் வாங்கலாம் என கூறிய தேவராஜ், மணிகண்டன், பிரேமலதாவை காரில் அங்கு அழைத்துச்சென்றுள்ளார். தர்மபுரியைச் சேர்ந்த அஸ்வின் என்ற கார் டிரைவருடன் தேவராஜ்க்கு பழக்கம் இருந்த நிலையில், தம்பதியினரிடம் பணம் பறிக்கும் திட்டத்தை எடுத்துக்கூறி அவரை வரவழைத்துள்ளார். அதன்படி அஸ்வின் தன்னுடன் 2பேரை அழைத்துச்சென்றுள்ளார். மேலும் தேனியில் இருந்தும் தேவராஜின் கூட்டாளிகள் 3பேரும் மற்றொரு காரில் சென்றுள்ளனர். போடி பகுதியில் சென்றபோது, மணிகண்டன் தம்பதியினர் சென்ற காரை மறித்து அதில் அஸ்வின் உள்ளிட்ட 3பேர் ஏறி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

ஆனால் தம்பதியினர் தங்களிடம் உள்ள ரூ.40 கோடி பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தேவராஜ் தரப்பினர் சரமாரி குத்தி சித்ரவதை செய்த நிலையிலும் பணத்தை பற்றி தெரிவிக்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடல்களை எங்கு கொண்டு சென்று வீசுவது என தெரியாமல் ஒருநாள் முழுவதும் காரிலேயே உடல்களை வைத்து சுற்றித்திரிந்துள்ளனர். பின்னர் அஸ்வின் தரப்பினர், தங்கள் காரில் 2 பேரின் உடல்களையும் எடுத்துவந்து தர்மபுரியில் வீசியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தேவராஜ் உள்பட 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!