காய்கறி விற்பது போல் நோட்டமிட்டு வீடுகளில் நகை, பணம் திருடிய தம்பதி கைது

*8 சவரன், ஆட்டோ, பைக் பறிமுதல்

சோளிங்கர் : சோளிங்கர் அருகே ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்வது போல் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜோதிபுரம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி விசாரித்தனர்.

இதில் ஆட்டோவில் வந்தவர்கள் பாராஞ்சியை சேர்ந்த சுதன்(24), அவரது மனைவி தமிழ்ச்செல்வி(21) என்பதும் இருவரும் ஆட்டோவில் ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கணவன், மனைவி இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் சோளிங்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ஆட்டோவில் ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்யும்போது ஆள் இல்லாத வீடுகளை தொடர்ந்து நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

அதேபோல் ஜானகாபுரம் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் தங்க நகைகள், ₹20 ஆயிரம் பணம், 2 பட்டு புடவைகள், ₹60 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பூஜை பொருட்கள், டிவி ஆகியவற்றை திருடிக்கொண்டு காய்கறி விற்பனை செய்யும் ஆட்டோவில் தப்பிச்சென்றபோது போகும் வழியில் வீட்டின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது ஏற்கனவே பாணாவரம், கொண்டபாளையம், காவேரிப்பாக்கம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுதன் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 8 சவரன் தங்க நகைகள், ஆட்டோ மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கணவன் மனைவி இருவரையும் சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது