ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார், அகில இந்திய செயலாளரும் மேலிட பொறுப்பாளருமான சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதை தொடர்ந்து, சத்தியமூர்த்திபவனில் புதுப்பிக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரங்கத்தை செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: எதிர்கட்சித் தலைவரான ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் நிகழ்த்துகிற ஜனநாயக கடமையை சகித்துக் கொள்ள முடியாத பாஜவினர், தொடர்ந்து அவர்மீது இழிவான விமர்சனங்களை முன் வைப்பார்களேயானால், அதை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளோம். தமிழகத்தில் முத்ரா கடன் வழங்கியது தொடர்பாக மோசடி பட்டியலை வெளியிட்ட நிர்மலா சீதாராமனை வன்மையாக கண்டிக்கிறோம்.

தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் மோடி அரசு தமிழ்நாட்டை புறக்கணித்து வஞ்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே அதை கண்டிக்கிறோம். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பதே நமது நோக்கமாக இருக்க முடியும், உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்பி, மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம், இல.பாஸ்கர், ஜி.கே.தாஸ், அமைப்பு செயலாளர் ராம்மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாவட்டத்தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், டில்லிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்