முடிவுறும் ‘உத்தரவாதம்’

நாடு முழுவதும் ஊழல்வாதிகளை ஜூன் 4ம் தேதிக்குப் பின் சிறையிலடைப்பேன். இது மோடியின் கியாரண்டி என்று புதுவகை பிரசாரத்தை கையிலெடுத்துள்ளார் பிரதமர். இது எதிர்க்கட்சிகளாலும் பாஜவின் முன்னாள் கூட்டாளிகளாலுமே கேலியாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்லாயிரம் கோடி பணத்தை வாரி சுருட்டியதுதான் ஊழலை அகற்றும் வழிமுறையா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தாங்கள் குவித்த பத்திர பணத்தின் மூலம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அங்கு ஆட்சி மாற்றத்தை உருவாக்குவது தான் நேர்மையான அரசியலா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை இயங்க விடாமல் ஆளுநர்கள் மூலம் அடக்க முற்படுவதுதான் உங்களின் சிறந்த அணுகுமுறையா என எதிர்க்கட்சிகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பிரதமரிடமோ பாஜவிடமோ பதிலேயில்லை.

தமிழகத்தில் எண்ணிலடங்கா திட்டங்களை சொல்லி மக்கள் மன்றத்தில் வாக்கு கேட்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் தமிழகம் சிரமங்களை சந்தித்த தருணங்களில் ஆறுதலைத்தரக்கூட வராத மோடி, தேர்தல் என்றவுடன் ஓடி வந்து கியாரண்டி தந்து ஓட்டு கேட்கிறார். 10 ஆண்டுகாலம் ஒன்றியத்தில் அரசாண்ட போதும் மக்களுக்காக நிறைவேற்றிய சாதனை திட்டங்களை பட்டியலிட்டு ஓட்டு கேட்க முடியாத பாஜ, ஒன்றிய அரசு வழங்கிய வேலைவாய்ப்பு, மக்கள் நல திட்டங்கள், கல்வி என எந்த துறையிலும் தங்கள் சாதனையை சொல்ல முடியாத மோடி, தற்போது கியாரண்டியே இல்லாத கியாரண்டி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

பருவகால பறவை போல் தமிழகத்தில் வட்டமிடும் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 23 நியாயமான கியாரண்டியை தருவீர்களா என கேட்டுள்ளார். நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடித்தல், தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு, ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றம், கல்விக்கடன்கள் ரத்து, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ₹400, வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை குறைப்பு, செஸ், சர்சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படுதல், மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு, வணிகர்களையும், சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம், கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குதல்.

வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜவின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுதல், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதித்தல், சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பது, தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பது, தாக்குதலை நிறுத்துவது, அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்வது, வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு, சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு, தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுதல், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுதல், சிறுபான்மை மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன் என்ற ஒப்புதலுக்கெல்லாம் நீங்கள் கியாரண்டி அளிக்கத் தயாரா என்ற முதல்வரின் கேள்வியிலுள்ள நியாயம் பிரதமரின் காதுகளில் ஒலித்தால் நாட்டிற்கு நல்லது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு