கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அதை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஒரு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, உடமை, உற்பத்தி, குப்பியில் அடைத்தல் மற்றும் அருந்துதல் போன்ற குற்றங்களுக்கு பல்வேறு தண்டனைகள் உள்ளன.

கள்ளச்சாராயம் தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனை அத்தகைய குற்றங்களை களைவதற்கும் அத்தகைய குற்றங்களில் வழக்கமாக ஈடுபடும் குற்றவாளிகளை தடுப்பதற்கும் போதுமானதாக இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியமாகிறது. அதன்படி, சட்டவிரோதமான கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படும் எரிசாராயம் மற்றும் மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

எனவே, தற்போதுள்ள சட்டத்தில் வழங்கப்படும் சிறை தண்டனையின் கால அளவு மற்றும் அபராத தொகையின் அளவை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, கள்ளச்சாராயம் போன்ற குற்றங்களை செய்வதில் இருந்து தடுக்க ஜாமீன் தொகையை கணிசமான அளவுக்கு அதிகரிப்பதற்கு நிர்வாக நடுவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபட்டு மரணம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இந்த குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஒருவரை அந்த பகுதியில் இருந்து நீக்கம் செய்வதற்கோ அல்லது வேறு மாவட்டத்திற்கு மாற்றவோ மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தின் முன் விண்ணப்பம் செய்யும் வகையில் சட்டத்தின் பிரிவில் திருத்தம் செய்யப்படுகிறது. கள்ளச்சாராய குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பு அரசு வக்கீலின் ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருந்தது.

அமைச்சர் கொண்டு வந்த சட்டமுன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக சட்ட மசோதா உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக ஆளுநர் தமிழக அரசு கொண்டு வந்த சட்டதிருத்த மசோதாவுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் தயாரித்து விற்னை செய்பவர்களுக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் மணி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

வங்கதேச நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

டெல்லி வந்தடைந்தார் ஷேக் ஹசீனா